(எம்.ஆர்.எம்.வஸீம்)

பொது மக்களின் விருப்பத்துடன் செயற்படக்கூடிய அரசாங்கமொன்றே எமது தேவையாகும். அதற்கு தொகுதிவாரி பிரதிநிதித்துவம் அடிப்படையிலான தேர்தல் முறைக்கு செல்லவேண்டும் என  நீர் வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

குருவிட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்த்து தெரிவிக்கையில், 

நீங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் மாதத்தில் ஒரு முறையாவது தமது பிரதேசத்துக்கு வந்து மக்களோடு உறவாட வேண்டும். தாம் செய்த வேலைகள் தாம் அங்கம் வகிக்கும் சபையில் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள், அதற்காக வேண்டி நிதி ஒதிக்கிக்கொள்ளும் வழிமுறை, அவற்றின் பிரதிபலன் என்பவை தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும். இவ்வாறு நாம் செயற்படுவதே உண்மையான ஜனநாயகமாகும் .

நான் உங்கள் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பனர். ஆகவே நான் பாராமன்றத்தில் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் உள்ளன. நான் அவற்றை உங்களுக்கு கூற வேண்டும். நான் என்ன செய்தேன் என்று நீங்கள் என்னிடம் கேள்விகளைக்கேட்க வேண்டும். அதேபோன்று எனக்கு நீங்கள் ஆலோசனைகளை கூற வேண்டும்.

முன்னைய காலத்தை திரும்பி பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வருவது,  நாம் தெரிவு செய்த பிரதிநிதி அவர் எமக்கு நல்லது, கெட்டது சொல்லித்தந்தார். அவரே எமது தேவைகளைப் பூர்த்தி செய்து தந்தார். நான் மக்களின் சேவகன். அத்துடன் இந்தப் பிரதேசத்தின் தலைவனும் கூட. மேலும் இலக்குகளை மட்டுமல்லாது எதிர்காலத் தேவைகளையும் திட்டமிட்டு, அவற்றை செயற்படுத்தும் சேவகனும் ஆவேன்.

அத்துடன் உங்கள் பெறுமதிமிக்க வாக்குகளாலே நீங்கள் எம்மை பாராளுமன்றத்துக்கு அல்லது ஏனைய சபைகளுக்குத் தெரிவு செய்கிறீர்கள். எனவே நாம் உங்களுக்கு எனது செயற்பாடுகள் தொடர்பாகப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவோம். கடந்த அரசாங்கத்தை நீங்கள் பதவியில் அமர்த்தினீர்கள். அப்போது எமக்குக் கிடைத்த ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் உங்களுக்குத் தெரியப்படுத்துவது எனது பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.