(இராஜதுரை ஹஷான்)

தேவையற்ற விடயங்களுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் புதிய அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை. தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு  காணப்பட வேண்டும் என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றன. எவ்வாறு இருப்பினும்  இம்மாதம் முதல் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நிவாரணம் வழங்கப்படும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப இராஜாங்க அமைச்சர்  லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் பல்வேறு  தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு  கண்டுள்ளது. மரக்கறி மற்றும்  அரிசி ஆகியவற்றின் விலையேற்றதை அடிப்படையாகக் கொண்டு இன்று எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

மரகறி விலையேற்றத்திற்கு கடந்த இரு வாரங்களாக நிலவிய அசாதாரண காலநிலை செல்வாக்கு செலுத்தியது. காலநிலையினை  கட்டுப்படுத்தும் வல்லமை அரசாங்கத்திற்கு கிடையாது.

அரிசி விலையேற்றத்திற்கு பல்வேறு  அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த அரசாங்கத்தில்  உள்ளுரில் உற்பத்தி  செய்யற்பட்ட அரிசிவகைகள் பெரும்பாலும் விற்பனைக்காக சந்தைப்படுத்தப்படவில்லை.

பல மெற்றிக் தொன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு. வெளிநாடுகளில் இருந்து அரிசி  இறக்குமதி செய்யப்பட்டு சதொச. நிறுவனத்தின் ஊடாக  பாவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதன் காரணமாக 3 அரை இலட்ச மெற்றிக் தொன் அரிசி இன்று பாவனைக்கு உகந்தது அல்ல என்ற நிலையில்  அடையளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவை மிருகங்களின் உணவு பாவனைக்காக விலைமனுகோரலின் அடிப்படையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

ஆகவே  அரிசி விலையேற்றத்திற்கு  கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். இவ்விரு விடயங்களுக்கும் தீர்வு காண்பதற்காக மக்கள்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை தோற்றுவிக்கவில்லை.

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.