எம்மில் சிலருக்கு கண்களின் மேல் இமையில் தொடர்ச்சியான சமசீரற்றத் துடிப்பு இருக்கும். சிலருக்கு முகம், தாடை, கழுத்து, குரல் நாண், உடல், மூட்டு,  கை மற்றும் கால் பகுதி என ஒவ்வொரு பகுதியிலும் கட்டுப்பாடற்ற நடுக்கங்கள் ஏற்படும். இவ்வகையான நடுக்கங்கள் டிஸ்டோனியா பாதிப்பு என்று குறிப்பிடுவார்கள். 

இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பாதிப்பை உண்டாக்கும். இவை பார்க்கின்சன் என்ற நோயின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடுவார்கள். அதாவது பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் வரை மருந்துகளை எடுத்தும், குணமடையாதவர்களுக்கும் இத்தகைய டிஸ்டோனியா பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதன் காரணமாக உடலில் ஒரே வகையான அசைவுகள் தொடர்ச்சியாக விரும்பத்தகாத வகையிலும் இருக்கும். இவ்வகையான பாதிப்பு மூளையிலுள்ள நரம்பியல் மண்டலத்தில் ஏற்பட்ட குறைபாடுகளாலும், தசை பகுதியில் ஏற்பட்ட குறைபாடுகளாலும் உண்டாகிறது. 

மருத்துவர்கள் முதலில் நோயாளியின் பரம்பரையின் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அவர்களுடைய நரம்பியல் மண்டலத்தின் செயல்பாட்டினை பரிசோதனை செய்வார்கள். சிலருக்கு E M G அல்லது E E G எனப்படும் பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை அறிந்து கொள்வார்கள்,

இவர்களுக்கு டீப் ஸ்டிமுலேஷன் என்ற சிகிச்சை மூலம் இத்தகைய பாதிப்பினை கட்டுப்படுத்துவார்கள். இதய துடிப்பை சீராக்க எப்படி அப்பகுதியில் பேஸ்மேக்கர் என்ற கருவியை பொருத்தி கொள்கிறோமோ, அதே போல் அதேபோன்றதொரு நரம்பியல் கோளாறுகளுக்கான பிரத்யேக பேஸ்மேக்கர் கருவியினை பொருத்திக் கொண்டு இத்தகைய பாதிப்பு அதிகரிக்கும் தருணத்தில், அதனை இயக்குவார்கள். 

இதன் காரணமாக ஏற்படும் மின்தூண்டல் மூளைப் பகுதிக்குச் சென்று, நரம்பியல் மண்டலத்தில் இதற்கு காரணமான நரம்பியல் தொகுதிகளைத் தூண்டி, சிகிச்சை அளிக்கிறது. இதன் மூலம் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் கட்டுப்பாடற்ற நடுக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.

டொக்டர் எம் கோட்டீஸ்வரன்.

தொகுப்பு அனுஷா