ரோமானியாவில் வைத்தியசாலை ஒன்றில், புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றி எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரோமானியாவிலுள்ள புளோரியாஸ்கா அவசர சிகிச்சை வைத்தியசாலையில், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்னொருவருக்கு, அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பின் அவருக்கு மின்சார கத்தியை வைத்தியர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன்போது மின்சாரமும் அல்கஹாலும் வினையாற்றியதால் நோயாளி மீது தீ பற்றியது. இதன் காரணமாக அவருக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டு பின்னர், அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதார அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில், மின்சார ஸ்கால்பெல் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகளின் போது அல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினியைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறிந்திருக்க வேண்டும்’ என்று துணை அமைச்சர் ஹோராடியு மால்டோவன் கூறியுள்ளார்.

எனினும், ரோமானியா வைத்தியசாலை அமைப்பு இன்னும் பாழடைந்த உபகரணங்கள் மற்றும் வைத்தியர்களின் பற்றாக்குறையால் இயங்கிவருவதாக கூறப்பட்டுள்ளது.