(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடி இல்லாத பிரச்சினையை உருவாக்கிவிட்டிருக்கிறது. 

அத்தோடு அரசியலமைப்பில் கூறப்படாத இந்த செயலை நடைமுறைப்படுத்தி அரசியலமைப்பையும் மீறி குற்றமிழைத்திருக்கிறது என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார். 

பிவிதுரு ஹெல உருமய தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இலங்கையின் தேசிய கீதம் எதுவென்பது பற்றி அரசியலமைப்பின் 7 ஆம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் தேசிய கீதம் ' ஸ்ரீலங்கா மாதா ' என்றே காணப்படுகின்றது. இதனை போன்றல்லாமல் வேறொரு விதத்தில் தேசிய கீதம் பாடப்படுமாக இருந்தால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும். 

இந்த சரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அது தொடர்பிலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஏதேனுமொரு விடயம் தொடர்பான சரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஆனால் தேசிய கீதம் தொடர்பான சரத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு சர்வசன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் நிலைப்பாட்டையும் அறிந்த கொள்ள வேண்டியது அவசியமாகும். 

எம்.நல்லதம்பி என்பவர் 1949 ஆம் ஆண்டு ' ஸ்ரீலங்கா மாதா ' என்ற பாடலை தமிழில் மொழி பெயர்த்தார். ஆனால் 1952 ஆம் ஆண்டே அந்த பாடல் தேசிய கீதமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு முதல் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டாலும் பாடாவிட்டாலும் யாருக்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் 2016 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி விட்டிருப்பது மாத்திரமின்றி அரசியலமைப்பையும் மீறியிருக்கிறது என்றும் கூறினார்.