புதிய அர­சாங்கம் அதி­கா­ரத்­திற்கு வந்து பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து செல்­கின்ற நிலையில்   நிலு­வையில் காணப்­ப­டு­கின்ற பல்­வேறு பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் பல­த­ரப்­பட்ட மட்­டங்­களில்  பேசப்­பட்டு வரு­கின்­றது.   விசே­ட­மாக நீண்­ட­கா­ல­மாக  தீர்க்­கப்­ப­டாத நிலையில் காணப்­ப­டு­கின்ற   பல்­வேறு  பிரச்­சி­னைகள்  தொடர்­பா­கவும்  பர­வ­லாக  விவா­திக்­கப்­பட்டு வரு­கின்­றது.


புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­த­வுடன்  அபி­வி­ருத்தி மற்றும் ஏனைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான அவ­தா­னத்தை செலுத்­தி­யுள்ள போதிலும்  தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னையைத் தீர்ப்­பது தொடர்பில்   எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும்   எடுக்­காமல் இருக்­கின்­றது என்ற விமர்­சனம்  தமிழர் தரப்­பி­னரால்   முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.  

அதா­வது  அர­சாங்கம்  அபி­விருத்தி மற்றும் ஏனைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு  காட்­டு­கின்ற அக்­கறை  தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான  அர­சியல் அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தில் காட்­டப்­ப­ட­வில்லை என்ற விட­யமே   இங்கு கோடிட்­டுக்­காட்­டப்­ப­டு­கின்­றது.   தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு அபி­வி­ருத்­தியே தீர்­வாக அமையும் என்றும் சமத்­து­வத்தை நிலை­நாட்­டு­வதன் மூலம் இந்த பிரச்­சி­னையைத் தீர்க்க முடியும் என்றும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ மிகவும் தெளி­வாக தெரி­வித்து வரு­கின்றார்.  எனினும் மறு­புறம் தமிழர் தரப்பு பிர­தி­நி­திகள்   தமிழ் மக்­க­ளுக்­கான  அர­சியல் அதி­கா­ரப்­ப­கிர்வின் அவ­சியம் மற்றும்  அதற்­கான தேவை தொடர்பில்  வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.


தமிழ்  பேசும் மக்­க­ளுக்கு  அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட தீர்­வுத்­திட்டம்  அவ­சியம் என்­பதை  தமிழர் தரப்பு பிர­தி­நிதிகள் எடுத்­துக்­கூறி வரு­கின்­றனர்.  அதா­வது  கடந்த காலங்­களில் இடம்­பெற்ற  அனைத்து தேர்­தல்­க­ளிலும்   இந்த நாட்டின்  தமிழ் மக்கள் விசே­ட­மாக  வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவ்­வாறு எந்த கொள்­கை­க­ளுக்­காக தமது  ஆணையை  வழங்­கி­யுள்­ளனர் என்­பதை அர­சாங்கம் புரிந்­து­கொள்­ள­வேண்டும் என  தமிழர் தரப்பு   பிர­தி­நிதிகள்   சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர்.


ஜனா­தி­பதி கோத்­த­பாய  தலை­மை­யி­லான  அர­சாங்கம்   முன்­வைத்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்கூட அபி­வி­ருத்தி தொடர்­பாக   அதி­க­ளவு  கரி­சனை செலுத்­தப்­பட்­டி­ருந்­தது. மாறாக  தமிழ் பேசும் மக்­களின்  நீண்­ட­கால அர­சியல்  பிரச்­சி­னைகள் தொடர்­பாக  தெளி­வான யோச­னைகள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்ற  கருத்­துக்கள்   அப்­போது முன்­வைக்­கப்­பட்­டன.


இந்த பின்­ன­ணியில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது  அர­சியல் தீர்வு விட­யத்தில் அர­சாங்கம் அலட்­சி­யப்­போக்கில் செயற்­பட முடி­யாது என்ற  கருத்தை தொடர்ந்து   வெளி­யிட்டு வரு­கின்­றது.  நேற்­று­முன்­தினம் வவு­னி­யாவில் நடை­பெற்ற   தமி­ழ­ர­சுக்­கட்­சியின் நிகழ்வில் கலந்துகொண்டு உரை­யாற்­றிய  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின்   பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் எம்.பி.  கடந்த 70 வருட கால­மாக    இந்த நாட்டின்  தமிழ்­மக்கள் தொடர்ச்­சி­யாக    வழங்கி வரு­கின்ற    ஜன­நா­யகத் தீர்ப்­புக்கு அர­சாங்கம் மதிப்­ப­ளிக்­க­வேண்டும் என  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  


அவ்­வாறு தமிழ் மக்­களின்  ஆணைக்கு மதிப்­ப­ளித்தால் மட்­டுமே இந்த  நாடு முன்­னேற்­ற­ம­டையும்.  அத்­துடன்  பொரு­ளா­தார  வீழ்ச்­சி­யி­லி­ருந்து விடு­பட முடியும்.  அது செய்­யப்­ப­டா­த­வ­ரையில் நாங்கள் போரா­டிக்­கொண்டே இருப்போம் என்றும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்   பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.


நாங்கள் இன்னும் இந்த நாட்டின்  தேசிய வாழ்க்­கைக்குள்  சம பிர­ஜை­க­ளாக உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு  உள்­வாங்­கு­வ­தற்­கான இணக்­கத்தை நாம் தெரி­வித்­தி­ருக்­கின்றோம்.   அதற்­காக   என்ன செய்­ய­வேண்டும் என்­பதை நாம்  ஒவ்­வொரு தேர்­த­லிலும் அழுத்தம்  திருத்­த­மாக சொல்­லிக்­கொண்டே இருக்­கின்றோம். அந்த  விடயம்  செய்­யப்­ப­டும்­வரை  நாம்  போரா­டிக்­கொண்டே இருப்போம்.  சர்­வதேசம்,   இலங்­கை­யா­னது  சட்­டத்தின் ஆட்­சியை   மதிக்­கின்ற நாடு என   கரு­த­வேண்டும் என்றால்  70 வருட கால­மாக  எங்கள் மக்கள் வழங்கி வரு­கின்ற ஜன­நா­யக தீர்ப்பை  அர­சாங்கம் மதிக்­க­வேண்­டி­யது  அவ­சி­ய­மாகும் என்றும்   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  எம்.ஏ.சுமந்­திரன்  வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.


அதா­வது ஒவ்­வொரு முறையும் ஜனா­தி­பதி மற்றும்  பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவ்­வா­றான ஆணையை  வழங்­கி­யி­ருக்­கின்­றனர் என்­பதை அர­சாங்கம்  புரிந்­து­கொள்­ள­வேண்டும் என்­பதே  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனின் கருத்­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.
உண்­மையில் அந்த விடயம் தொடர்பில் அவ­தானம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. காரணம் தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அபி­வி­ருத்­தி­யா­னது எந்­த­ளவு தூரம் முக்­கி­ய­மா­னதோ அதே­போன்று  தமது அர­சியல் அபி­லா­ஷை­களும் அத்­தி­யா­வ­சி­யமா­னவை எனக் கரு­து­கின்­றனர். அத­னால்தான்   எந்­த­ள­வு­தூரம் அபி­வி­ருத்­திகள் இடம்­பெற்­ற­போ­திலும்கூட வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்­சி­யாக  கொள்­கை­க­ளுக்­காக தமது  ஆணையை  வழங்­கி ­வ­ரு­கின்­றனர்.


எனவே தமிழ் மக்கள்  நீண்­ட­கா­ல­மாக கோரி­வ­ரு­கின்ற  அர­சியல் தீர்வு தொடர்பில்   கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாக இருக்­கி­றது.  அபி­வி­ருத்­தியை செய்தால்  போது­மா­னது என்று  அர­சாங்கம் கரு­தலாம். ஆனால்  மக்கள்  எவ்­வா­றான  ஆணையை தொடர்ச்­சி­யாக  வழங்கி வரு­கின்­றனர் என்­ப­தையே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு    சுட்­டிக்­காட்­டு­கி­றது.


தற்­போது அர­சி­ய­ல­மைப்பின்  13 ஆவது திருத்த சட்டம் அமுலில் இருக்­கி­றது. அந்த 13ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக தமது அர­சியல் அபி­லா­ஷைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பதே தமிழ் மக்­களின் கருத்­தாக  இருக்­கி­றது. எனினும் அதிலும்கூட  இன்னும் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.   எனவே  பத­வியிலிருக்­கின்ற அர­சாங்­க­மா­னது  அபி­வி­ருத்தி குறித்து  கவனம் செலுத்­து­கின்ற  அதே­வே­கத்தில் அர­சியல் தீர்வு குறித்தும் சிந்­திக்­க­வேண்டும்.  ஏன் இந்த மக்கள் தொடர்ச்­சி­யாக தமக்­கான அர­சியல் தீர்வை கோரி­ வ­ரு­கின்­றனர் என்­பது தொடர்­பாக  அர­சாங்கம் சிந்­தித்­துப்­பார்க்­க­ வேண்டும்.  கடந்த ஐந்­து­வ­ரு­ட ­கா­லப்­ப­கு­தியில்   ஒரு தீர்­வுத்­திட்­டத்தை அடை­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்ட போதிலும் அந்த முயற்­சிகள் இறு­தியில் தோல்­வியி­லேயே முடி­வ­டைந்தன.
முடி­வ­டைந்து செல்­கின்ற 2019 ஆம்­ஆண்டில் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும்   அவை  வெற்­றி­ய­டை­ய­வில்லை.  தற்­போது அந்த முயற்­சிகள் யாவும் பல­னற்­றுப்­போ­யுள்­ளன என்றே கூற­வேண்டும்.  எப்­ப­டி­யி­ருப்­பினும் விரை­வாக இந்த பிரச்­சி­னைக்கு ஒரு தீர்­வைக்­கா­ண­வேண்­டி­யது மிக அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் என   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் அறி­வித்­தி­ருக்­கி­றது. அதனால் இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி  விரை­வாக இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வைக் காண்­ப­தற்கு  முயற்­சிக்­க­வேண்டும்.
நாளை மல­ரு­கின்ற 2020 ஆம் ஆண்­டி­லா­வது தமிழ் மக்­களின் புரை­யோ­டிப்­போ­யி­ருக்­கின்ற  நீண்­ட­கால தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண அர­சாங்கம்  நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்­பதே தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பாக காணப்­ப­டு­கின்­றது.


விடை­பெற்று செல்லும் 2019ஆம்  ஆண்டில்  இந்த நாடு பல்­வேறு  அடை­வு­மட்­டங்கள், சவால்கள்,  பிரச்­சி­னைகள்  போன்­ற­வற்­றுக்கு முகம் கொடுத்­தது.  முடி­வ­டைந்து செல்லும் இந்த வரு­டத்தில் நாட்டு மக்கள்  பல்­வேறு  பிரச்­சி­னை­களை சந்­தித்­த­துடன்   பல சவால்­க­ளையும் எதிர்­கொண்­டி­ருந்­தனர். ஒரு புறத்தில் பெரும்­பாலான மக்கள்  விரும்­பிய  ஆட்­சி­மாற்றம்  ஏற்­பட்­ட­துடன்  மறு­பு­றத்தில் பல்­வேறு  துர­திர்ஷ்­ட­வச­மான சம்பவங்களும்  இந்த வருடத்தில்  பதிவாகியிருந்தன.  இவ்வருடத்தில்  பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இதுவரை   அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான நடவடிக்கைகள்  கிடப்பிலேயே உள்ளன.


விசேடமாக  2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ அமோக வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்திருக்கிறார். இந்த வருடத்தில் இடம்பெற்ற   ஒரு முக்கிய அரசியல் மாற்றமாக   இந்த  தேர்தல் வெற்றியை குறிப்பிட முடியும்.   எனவே அவர்  அபிவிருத்தி தொடர்பில் வெளிக்காட்டுகின்ற அக்கறை தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும்   இருக்கும் என  மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால்  நாளை மலர்கின்ற புதிய வருடத்தில்   புரையோடிப்போயுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அத்திபாரம் இடப்படவேண்டியதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.


( 31.12.2019 இன்றைய வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )