மலையகத்தை பொறுத்தமட்டில் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் மலையக மக்கள் கூடிய அவதானம் செலுத்துவதில்லை என்பது அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் ஒரு சில சம்பவங்கள் ஊடாக  உணரக்கூடியதாகவிருக்கின்றது.  குறிப்பாக பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, விவாகப் பதிவுப் பத்திரம் போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் அறிந்தும் அறியாமலும் இருக்கும் பலரை நம் மத்தியில் காணக்கூடியதாக உள்ளது.  


பிள்ளைகளை பாடசாலைகளுக்கு தரம் 1, தரம் 6, இல் தரம் 10 மற்றும் உயர்தரப் பிரிவில் அனுமதிக்கும் போது பாடசாலை நிர்வாகங்களினால்  கேட்கப்படும் பிறப்புச் சான்றிதழ் பத்திரம், தேசிய அடையாள அட்டையின் பிரதி, வதிவிடத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்கள் என்பவற்றை முறையாக சமர்ப்பிப்பதில்  மலையக மக்கள்   பலவகையான சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர் .
ஆரம்பகாலத்தில் ஆவணங்களை பெற்றுக் கொள்வது கடினமாக இருந்த போதிலும் தற்போது அவ்வாறில்லை. ஏனெனில் கிராமங்கள்தோறும் கிராம சேவகர்கள் பலரும் பணியாற்றி வருகின்றனர்.

அத்தோடு, முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடமாடும் சேவைகளை கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், அமைச்சுக்கள் என பலவகையான தரப்பினரும் பிரதேசங்கள் தோறும் நடத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த  ஆவணங்களை பெற்றுக்கொள்ள முன்வராது  மக்கள் அலட்சியமாகவே இருந்துவருகின்றனர். இதில் பாதிக்கப்படுவது என்னவோ தமது சந்ததியினர் தான் என்பதை இவர்கள் உணர்கிறார்கள் இல்லை.


ஒரு மாணவனோ மாணவியோ  கல்விப் பொதுத்தராதர   சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் போது   அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை அத்தியாவசியமானது என பரீட்சை திணைக்களம் தெரிவித்திருக்கும் நிலையில், அதனை பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை நிர்வாகங்கள் முறையான வேலைத் திட்டங்களை ஒவ்வொரு வருடமும் செய்து  வருகின்றன.  

ஆனாலும் இறுதி சந்தர்ப்பம் வரை ஒரு சில பெற்றோரின் அலட்சியத்தால் பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.   பிள்ளைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களை    உரிய முறையில் பெற்றுக் கொள்ளாமையே இதற்குப் பிரதான காரணமாகும்.    சில பெற்றோர்கள் பதிவுத் திருமணம் செய்யாதிருப்பதால் இவ்வாறான சட்டரீதியான ஆவணங்களை அவர்களால் பெற முடியாது போகின்றது.


ஒரு பிள்ளையின் பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்குக் கூட  பெற்றோர் கூடிய கவனம் செலுத்துவதில்லை என்பது வெளிப்படையான உண்மை.   இது அவர்களின் அறியாமை என்று கூற முடியாது, அலட்சியம் என்று தான் கூறவேண்டும். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான வசதிகளையும் தொழில்நுட்ப வாய்ப்புக்களையும் அரசாங்கம்  ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறு பெற்றோர்கள் பொறுப்பற்று இருக்க முடியாது.


சில  நிறுவனங்கள் சமூகத்தில்  பிரபலமாவதற்கும்  விளம்பரத்தை தேடிக்கொள்வதற்கும் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுத்து வருகின்றன.  ஆனாலும் மலையக சிறார்களின் நலன் கருதி இவ்வாறான மிக முக்கியமான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏன் செய்வதில்லை?


தற்போது ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள சுற்றுநிருபங்கள்  15 வயதை பூர்த்தி செய்யும் இலங்கை பிரஜைகள் அனைவரும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அத்தோடு உரிய வயதினை பூர்த்தி செய்தும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக தண்டப்பணமும் அறவிடப்பட்டு வருகிறது. எனவே பாடசாலைகளில் தரம் 10 இல் கல்வி கற்கும் போதே தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பாடசாலை நிர்வாகங்கள் முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றன.    இவ்வாறான செயற்பாடுகளுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் பட்சத்தில் தமது பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதில் எவ்வித சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை காணப்படாது.  

மாறாக பாடசாலைக் காலங்களில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளாத பிள்ளைகள் பின்னர் பல்வேறு வகையான சிரமங்களுக்கு மத்தியில் கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பங்களை பூரணப்படுத்தி  ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு  அனுப்பி காலதாமதத்தோடு அவற்றைப்  பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  

மேலும் மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது பிறப்புச்சான்றிதழ் பத்திரங்கள் இன்றி மனிதாபிமான அடிப்படையில் மாணவர்களை அனுமதிக்கின்ற நிர்வாகங்கள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது பல்வேறு வகையான சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன.   


நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் இவ்வாறான நிலைமைகள் ஆங்காங்கே இருந்து வருகின்றன. தமது கல்வியை இடைநிறுத்தி கொண்டு கொழும்பு போன்ற வெளி பிரதேசங்களில் பல்வேறுபட்ட ஸ்தாபனங்களில் பணியாற்றி வரும் மலையக இளைஞர்கள் யுவதிகள் பலர் இவ்வாறான ஆவணங்கள் இன்றி  இருப்பதும் அறியக்கூடியதாக உள்ளது . இதற்கு அவர்களின் பெற்றோர்களே முதல் காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர். தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பெற்று வரும்  பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தேவையான முக்கிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை.


  அத்தோடு, பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் பல்வேறு வகையான குறைபாடுகளை கூட பலரும் கவனிப்பதில்லை.  முக்கியமாக பிள்ளைகளின் பெயர்களில் உள்ள வித்தியாசங்கள்,   ஆணா பெண்ணா,  அவர்கள் பிறந்த திகதி, இடம், தாய் தகப்பன் பெயர் விபரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள்  பிழையான முறையிலேயே  பதியப்பட்டிருக்கும்.    அவற்றில் காணப்படும் பிழைகளை இனங்கண்டு திருத்துவதற்கான நடவடிக்கைகளை பிள்ளைகளின் பெற்றோர் உறவினர்கள் ஏன் சமூகத்தில் இருக்கும் பல்வேறுபட்ட தரப்பினர்கள்   தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை.  
  இறுதி சந்தர்ப்பத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் உறவுகள் பிறப்புச் சான்றிதழில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் நேரடியாக பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் ஏனைய தரப்பினர் மீது குற்றம் சுமத்தி வருவதோடு, அவர்களின் தவறை மறைத்து செயற்படுகின்றமை அதிகமாகவே நடந்தேறுகின்றன .  


இருந்தபோதிலும் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் இவ்வாறான அவலநிலை ஏற்படுவதில்லை ஏனெனில் குழந்தை பிறந்து வைத்திய சாலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் பிறப்புச் சான்றிதழை உரிய வகையில் பெற்று வைத்தியசாலை பதிவு செய்த பின்னரே தாயும் சேயும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன .


இதன் காரணமாக தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் எழுவது அரிது.  ஆனாலும் கடந்த காலங்களில் பிறந்த குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் எப்போது முன்வருவார்கள்? பிறப்புச் சான்றிதழ் தேசிய அடையாள அட்டை என்பவற்றின் முக்கியத்துவத்தை ஏன் இவர்கள் விளங்கிக் கொள்ளாது அலட்சியமாக இருந்து வருகின்றார்கள் என பல்வேறு கேள்விகளை கேட்கத் தோன்றுகின்றது.

எனவே பிள்ளைகளின் நலன் கருதி அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென பெற்றோர், நினைத்தால் அவர்களுக்கு உரிய பிறப்புச் சான்றிதழ்களை துரிதமாக பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர், பாதுகாவலர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அத்தோடு, இவ்வாறான குழந்தைகளின் பிரச்சினைகளை இனங்கண்டு கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை நிர்வாகங்கள், சமூகநல அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் என சமூகத்தில் காணப்படும் பல்வேறு தரப்பினர் மற்றும் அமைப்புகளும் உதவ வேண்டுமென கோரிக்கை விடப்படுகின்றது.  

- சுரேன்