13 முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் ; இதுவே சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடென்கிறார் தயாசிறி

By R. Kalaichelvan

31 Dec, 2019 | 09:50 AM
image

(ரொபட் அன்டனி)

தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது  திருத்த சட்டத்தை  முழுமையாக  அமுல்படுத்த வேண்டும் என்பதே சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடாகும்.

அந்த நிலைப் பாட்டிலிருந்து நாங்கள் இன்னும் மாறவில்லை. ஆனால்  தீர்வு விடயத்தில் எவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதை  அடுத்த  பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே தீர்மானிக்க முடியும். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர  தெரிவித்தார்.

எதிர்வரும்  பாராளுமன்றத் தேர்தலில்  சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும்  இணைந்தே போட்டியிடும்.எனினும் இதுவரை  எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர்  குறிப்பிட்டார்.

 நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், மற்றும்  அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக  விபரிக்கையிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார். சுதந்திரக்கட்சியின் பொதுச்  செயலாளரும்  இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிடுகையில்

தற்போது புதிய அரசாங்கம் பதவியில்  இருக்கிறது. எனினும்  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே  புதிய அரசாங்கம்  உருவாக்கப்படும். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாம் தயாராகி வருகின்றோம்.  பாராளுமன்றத் தேர்தலில்  சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே போட்டியிடும். இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியமே அதிகம் காணப்படுகின்றது. எனினும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை  தீர்மானம் எடுக்கவில்லை. அதுதொடர்பில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. எனினும்  தற்போது  அது குறித்து  எந்த  தீர்மானமும் எடுக்கப்படவில்லை.  சின்னம் குறித்து அடுத்த  கட்டப் பேச்சுவார்த்தைகளிலேயே தீர்மானிக்கப்படும். இதேவேளை  தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்படுகிறது. நாம்  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்   இந்த விடயம் குறித்து பேசியிருந்தோம்.

அதாவது அரசியல் தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக  அமுல்படுத்த வேண்டும் என்பதே  எமது  நிலைப்பாடாக இருந்தது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்த சட்டம்  முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். 

ஆனால் தற்போதைய நிலைமையில் இந்த விடயங்கள் குறித்துபேசிக்கொண்டிருக்க முடியாது. அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே  இந்த விடயம் குறித்து பேசவேண்டும். மிக முக்கியமாக அடுத்த தேர்தலில்  தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதும் இந்த விடயத்தில் முக்கிய காரணியாக உள்ளது. அவற்றின் அடிப்படையிலேயே அடுத்த பாராளுமன்றத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். எனினும் சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டில்  மாற்றமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right