சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு.!

Published By: Robert

06 Jun, 2016 | 11:36 AM
image

சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்த இஷாரா பப்பாளி என்ற படத்திலும் நடித்தார். அவர் தற்போது கல்லூரி அகில் நாயகனாக நடிக்கும் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் என்பவர் தயாரிக்க கேவின் ஜோசப் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடித்த இஷாரா தலை மறைவாகி விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் அவர்கள் கூறி உள்ளதாவது,

இஷாராவை 28.02.2016 அன்று 4 இலட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்தினோம். நாங்கள் கேட்டது 20 நாட்கள். ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் திகதி கொடுத்தார். அவர் இல்லாத காட்சிகளையும் படமாக்கினோம். அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதன் பிறகு அவரிடம் தொடர்புகொண்டு திகதி கேட்டதற்கு டுபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன், வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று வாட்ஸ்ஆப்பில் தான் பதில் கூறினார். தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் டைரக்டர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னார். சில சமயங்களில் யாரோ ஒரு ஆண் குரல்தான் வரும் இதோ கூப்பிட சொல்கிறோம் என்று சொல்லி அதோடு தொலைபேசி ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும். நாங்கள் கதையில் ஏதாவது திருத்தம் இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்றோம். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்பார். திகதி கொடுப்பார் ஆனால் சொன்ன திகதியில் படப்பிடிப்பிற்கு வரவே இல்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுவிட்டோம். அவரால் எங்களுக்கு பல இலட்சம் ரூபாய் வரை நஷ்டம்.

அவள் வருவாளா என்று காத்திருந்தோம். எந்த தகவலும் இல்லை வேறு வழி இல்லாமல் கேரளாவில் உள்ள நடிகர் சங்கம் வரை சென்று முறையிட்டோம். அவர்களுக்கும் இஷாரா தரப்பில் சரியான பதில் தரவில்லை. தயாரிப்பாளர் கில்டில் ஜாக்குவார் தங்கம் மூலம் இஷாரவிடம் பேச சொன்னோம் அவர்களுக்கும் சரியான தகவல் இல்லை.

இஷாரவுக்கு தொலைபேசி அழைப்பு செய்தால் புலொக் லிஸ்டில் எங்கள் எல்லோரதும் தொலைபேசி எண்களையும் மாற்றி விட்டார். உங்களது அணுகுமுறை சரியில்லை நாங்கள் பத்திரிகையாளர்களிடம் முறையிடுவோம், வழக்கு தொடுப்போம் என்று குறுச்செய்தி அனுப்பினோம். அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் “ போங்க “ என்று. இப்படியெல்லாம்  தயாரிப்பாளர்களை வாட்டி வதைக்கிற இது மாதிரி நடிகைகளை நம்பித்தான் தமிழ் சினிமா பல கோடிகளை முதலீடு செய்கிறது.

அவர்களது முதலீட்டில் விளையாடும் புதியவர்களின் கனவுகளில் வெண்ணீர் ஊற்றும் இது மாதிரியான நடிகைகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் சரி என்று முடிவெடுத்திருக்கிறோம். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்ய உள்ளோம் என்றார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right