(எம்.ஆர்.எம்.வஸீம்)

கட்சி தலைமை பதவி தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் நேரடியாக சந்தித்து பேசவேண்டும். வெளிநபர்கள் மூலம் இதற்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் கட்சி ஆதரவாளர்களின் சவாலை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு சஜித் பிரேமதாசவுக்கு இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் 55இலட்சம் பேர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருக்கின்றனர். அவர்களின் பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டிய தேவை இருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினை தொடர்பாக வெளிநபர்களை வைத்து விவாதித்துக்கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். 

சஜித் பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் நேரடியாக பேச்சுவார்த்தையொன்றை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகின்றது. அது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். பிரச்சினையை தீர்த்துக்கொண்டு அனைவரும் இணைந்து தேர்தலுக்கு முகம்கொடுக்க முடியுமானால் அரசாங்கத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை எமக்குள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.