உள் நோக்­கோடு ஒரு ஆணோ பெண்ணோ  தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் செயற்­பா­டுகள் மலை­ய­கப்­ப­கு­தி­களில் அதி­க­ரித்து வரு­கின்­றன. பல்­வே­று­பட்ட பிர­தே­சங்­களில்   இவ்­வா­றான செயற்­பா­டுகள்  பல்­வே­று­பட்ட கார­ணங்­க­ளாலும் செய்­து­கொள்­ளப்­ப­டு­கின்­றன.  

மனதில் ஏற்­படும் குழப்ப சூழ்­நிலை,  இரு­வே­று­பட்ட முனை­வு­களில் பிறழ்வு நிலை ஏற்­ப­டுதல், ஆளுமை  சிதை­வு­றுதல், குடிப்­ப­ழக்கம், குற்ற உணர்வை சகிக்க இய­லாமை, தாங்கிக் கொள்ள முடி­யாத வெட்கம், நோய் கார­ண­மாக  தாங்கிக் கொள்ள முடி­யாத வலி–­வே­தனை  இவற்றைத் தவி­ரவும் வேறு கார­ணங்­களும் தற்­கொலை செய்துக் கொள்­வ­தற்கு மனி­தனை தூண்டி விடலாம்.

இருந்­தாலும் உயிர் பிறந்­த­தற்­கான அர்த்­தத்­தினை அனு­ப­விக்­காது இளம் வய­தி­னிலே இவ்­வா­றான    சிந்­த­னை­களை வெறு­மனே விதி­யென்றும் மதம் சார்ந்­த ­கா­ர­ணி­க­ளிலும் அடக்கி போட்­டு­வி­ட­மு­டி­யாது. எனவே அது பற்றி மீளாய்வு செய்து அதனை தடுப்­ப­தற்கு­ தேவை­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.


அண்மைக் காலத்தில் அட்­டனை சுற்­றி­யுள்ள பிர­தே­சத்தில் மட்டும்  இந்த   டிசம்பர் மாதம் வரை  11 மாண­வர்கள் தம­து­யிரை மாய்த்­துக்­கொண்­டுள்­ளனர் என்­பது முக்­கிய விடயம். இந்த மாண­வர்­களில் அநேகர் மிகுந்த திற­மை­சா­லி­க­ளா­கவும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு மர­ணங்கள் நிகழும் பொழுது கல்­விசார் சமூகம்  வெறு­மனே சும்மா இருந்து விட­மு­டி­யாது. கல்விச் சமூ­கத்தில் இவ்­வாறு நிகழ்­வது ஆபத்­தான குறி­காட்­டி­யா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பாட­சாலை மாண­வர்­களில் இளம் வயது தற்­கொ­லைகள் மனித நேய­மு­டைய அனை­வ­ரையும் ஒரு­முறை அசைத்துப் போட்டு விடு­கின்­றது.


அது பாட­சா­லைக்­குள்ளும்  பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யிலும் ஆசி­ரியர் மத்­தி­யிலும் மாணவர் மத்­தி­யிலும் பெற்றோர் மத்­தி­யிலும் , சக­பா­டி­களின் மன­திலும்,  அவர்கள் வாழும் சமூ­கத்­திலும் பெறும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றது. பெற்­றோரை பொறுத்­த­வரை பெரும் அவ­மா­ன­மா­கவும்  உல­கத்­திற்கு முகம் கொடுக்க முடி­யாத சூழ்­நி­லை­யையும் அது உரு­வாக்கி விடு­கின்­றது.


வழ­மை­யான மர­ணங்கள் போல் அதன் நினை­வ­லைகள் கால ஓட்­டத்தில் கரைந்துப் போனாலும் கூட கல்விச் சமூ­கத்தில், கல்விச் சூழலில் ‘மாண­வர்­களின் மர­ணங்கள்’ பற்றி மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட சில­கா­ர­ணங்­க­ளுடன்  நின்று விட முடி­யாது. இன்னோர் மரணம் நடக்­காமல் இருப்­ப­தற்­கான உள­நி­லையை மாண­வர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்தக் கூடிய கல்­விசார் செயற்­திட்­டத்தை ஏற்­ப­டுத்­து­வது மிகவும் தேவை­யாக உள்­ளது.  


மாண­வர்கள் மத்­தியில் இவ்­வா­றான உயிரை மாய்த்­துக்­கொள்ளும் சம்­ப­வங்கள்  நிகழும் பொழுது எல்­லோ­ராலும் உரு­வாக்­கப்­படும் பிர­தான காரணம்   காதல்  தொடர்பு என்­ப­தாகும். மாண­வப்­ப­ரு­வத்­தி­ன­ருக்கு காதல் தொடர்பு என்­ற­வுடன் ஒரு­வித வெறுப்­பு­ணர்ச்­சியின் மேலீட்டால் தனி­நபர் சார்ந்த,  சாராத அனை­வரும் கல்­விசார் சமூ­கமும்  கூட  இவ்­வா­றான மர­ணங்­களை  அசட்­டைக்­குள்­ளாக்கி வெறுத்து மறந்­து­வி­டு­கின்­றனர். குறிப்­பிட்ட பிள்ளை மீதான அத்­தனை மன உணர்­வு­க­ளையும் வெறுப்பில் தீயிட்டு கொளுத்தி விட்டு சும்மா இருந்து விடு­கின்றோம். ஓர் மனித உயிரின் ஆத்­மார்த்­த­மான விலை இது தானா? உயிர் சார்ந்த அன்பு, பாசம், பற்று, விசு­வாசம் நேசம், கருணை இன்­னோ­ரன்ன மன­து­ணர்­வு­களை நாம் எவ்­வாறு வென்­றெ­டுக்கப் போகின்றோம்?


மிகவும் புத்­தி­சா­லித்­த­ன­முள்ள அறி­வார்த்­த­மான உயர் கற்றல் பேரு­டைய வாழ்வை விஞ்­ஞான ரீதியில் கற்­ற­வர்கள் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்ளும் கணி­தத்­தினை கற்­ற­வர்கள் அன்­பு­செ­லுத்தி வாழும் அழ­கான உலகின் உயர் இலக்­கி­யங்­களை ருசித்­த ­மொ­ழி­ய­றி­வு­டை­ய­வர்கள், மதம் சார்ந்த நம்­பிக்கை உடை­ய­வர்கள் இவ்­வா­றான மர­ணங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ளும் பொழுது இதற்கு முர­ணான மன நெருக்­கி­டை­களின் பின் புலங்­களை நாம் ஆரா­யாமல் இருக்­க­மு­டி­யாது.


பொது­வா­கவே மாண­வப்­ப­ருவம்  என்­பது பாட­சாலை , குடும்பம் , சமூக சூழல் என்ற அமைப்பில் தம்மை ஆட்­ப­டுத்திக் கொள்ளும் பரு­வ­மாகும். இப்­ப­ரு­வத்தில் ‘மாண­வர்கள்’ பெற்­றோரை விடவும் சமூ­கத்தின் ஆளு­மை­களை விடவும் ஆசி­ரி­யர்­களின் முன்  உதா­ர­ணங்­க­ளையும், வழி­காட்­டல்­க­ளையும் ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்­ற­வர்­க­ளா­கவும், வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­ற­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர்.
இவ்­வா­றான சூழ்­நி­லை­களில் ஆசி­ரி­யர்கள் வெறு­மனே பாட­சாலை அறி­வு’ சார் முறை­மையை மட்டும் வகுப்­ப­றை­களில் போதிப்­பது ஒரு போதாமை இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்­தி­வி­டு­கின்­றது. ஆசி­ரி­யர்கள் வெறு­மனே பாடக்­கு­றிப்­பு­க­ளையும், பாடத்­திட்­டத்தில் பாடம் சார் அறி­வையும் மாண­வர்­க­ளுக்கு ஊட்­டு­வ­தோடு சமூகம் சார் திறன்­களை விருத்தி செய்­வது தேவை­யான ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. ஒரு ஆசி­ரி­யரின் கடமை வெறு­மனே அறி­வூட்­டப்­ப­டு­வது மட்­டு­மல்ல. மாண­வர்­க­ளி­டையே ஆளுமை மிக்க திறன்­களை உரு­வாக்­கு­வதும் தான். சுமுகத் திறன்­க­ளை­பெற்றுக் கொடுக்கும் தேர்ச்­சி­களை ஆசி­ரி­யர்கள் தமக்­கூ­டா­கவும், கல்­விக்­கூ­டா­கவும் வழங்கக் கூடி­ய­வர்­களாய் இருக்­க­வேண்­டிய கட்­டாயம் காலத்தின் தேவை­யா­கின்­றது.


அறிவை  மாண­வர்­க­ளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசி­ரி­யர்கள் மென் திறன்­க­ளான, சவால்­களை எதிர் கொள்ளல், பிரச்­சி­னையை தீர்த்துக் கொள்ளல், விழு­மி­யங்­களை மதித்தல், பெற்­றோரை மதித்தல், பொறு­மைசார் திறன்கள், தொடர்­பாடல் திறன்கள், ரச­னையை கைக்­கொள்ளும் திறன்கள், சுற்­றா­டலை நேசிக்கும் திறன்கள், மிரு­கங்கள், பற­வைகள், மீனி­னங்கள், அற்­பு­தங்­களை ரசித்தல் போன்ற வாழ்­வியல் ரச­னை­யையும் கற்றுக் கொடுக்க வேண்­டிய பொறுப்­புக்­களை ஆசி­ரி­யர்கள் தம்முள் புடம் போட்டுக் கொள்­வது அவ­சி­ய­மாகும். அவ்­வா­றான ஆசி­ரி­யர்­களால் மட்­டுமே விலை மதிப்­பு­டைய மாண­வர்­களின் வாழ்க்­கையை அர்த்­தப்­ப­டுத்த முடியும்.


கல்விச் சூழ­லுக்கு அடுத்­த­ப­டி­யாக குடும்ப சூழல் பிள்­ளை­களில் செல்­வாக்கு செலுத்­து­வதாய் அமை­கின்­றது. வாழ்க்­கையை வாழ்தல் பற்­றிய புரி­தலை, அன்பை, பாசத்தை, சவால்­களை, எதிர்­பா­ரா­த­தோல்­விகள் வரும் பொழுது தூக்கி நிறுத்தும் துணிவை, நாளைய நம்­பிக்­கையை, தோள் கொடுக்கும் தோழ­மையை, உயிர் கொடுக்கும் உறவை நாம் குடும்­பத்தில் மட்­டுமே பெற்றுக் கொள்­ள­மு­டியும். வாழக்­கூ­டிய நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த வேண்­டிய குடும்பச் சூழல்கள்  இன்று, பல்­வேறு அயற் கார­ணி­களால் ‘அன்­பி­ழந்த’ விடு­தி­க­ளா­கின்­றன. தனிக் குடும்­ப­வாழ்க்கை குடும்­பங்­களில் மின்­னி­யந்­திரம் பெருகிப் போன இர­வுகள், தொலை­பேசி, வளைத்­த­ளங்­களின் மோகத்­துக்­குள்­ளான மன­துகள் எல்­லா­வற்­றையும் எதிர்­பார்ப்­பு­களில் தொலைத்துப் போன­பிள்­ளை­களின் கன­வுகள். இவற்றால் உணர்­வுகள் பிறழ்ந்துப் போகின்ற நிலையில்  இளம் வயது பிள்­ளைகள் வாழ்­கின்­றனர்;  இப்­பிள்­ளை­களின்  உணர்­வு­களை உள்­வாங்க முடி­யாத நிலையில் பெற்­றோர்கள் தவிக்­கின்­றனர்.


தாய் தந்தை பிள்­ளை­களின் உணர்­வு­களை ஒரு­வ­ருக்­கொ­ருவர் மறைக்­கப்­ப­டாத இட­மாக குடும்­பங்கள் காணப்­படல் வேண்டும். நாக­ரீகம் என்ற போர்­வைக்குள் அந்­தஸ்து என்ற அவ­லத்தில் சிக்கி சுயத்­தினை இழந்த சூழ­லுக்குள் குடும்­பங்கள் தள்­ளப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. தாய், தகப்பன், சகோ­த­ரர்­களின் எல்­லா­ப­லமும் பல­வீ­னங்­க­ளையும் குடும்­பத்தில் இயல்பாய் வெளிக்­காட்டக் கூடிய மிக உயர்ந்த கோயி­லாக குடும்­பங்கள் மாறும் பொழுது வாழ்க்கை வாழக்­கூ­டிய அர்த்­த­மு­டை­யதாய் புத்­துயிர் பெறும்.
பாட­சா­லை‘­மா­ண­வர்­களின்’ தொடர்ச்­சி­யாக தற்­கொ­லை­களில் நீடித்­த­கா­லத்தில் பரவும் நோய் தன்மை நிலைப்­பாட்­டுக்­குள்­ளா­கின்­றது. ஆலோ­சனை  வழி­காட்­டலில் நடந்து முடிந்து போகின்ற விட­யங்­களில் ஒத்­து­தேடும்; சேவை­யாக கரு­தாமல் காலத்­திற்குத் தேவை­யான வெளிப்­ப­டை­யான செயற்­பா­டு­களை திட்­ட­மி­டு­வது அவ­சி­ய­மா­கின்­றன. பாட­சா­லையின் அனைத்து ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களின் அனைத்து நலன்­க­ளுக்கும், நடத்­தை­க­ளுக்கும் பொறுப்­பா­ன­வர்­க­ளாக வகைக் கூறப்­ப­ட­வேண்­டி­ய­வர்கள்.


சகல நிபு­ணத்­து­வத்தின் திட்­ட­மிட்­ட­வாறு ஆலோ­சணை வழி­காட்­டலை மேற் கொள்­ளுதல் அவ­சி­ய­மா­கி­றது. பாட­சாலை மாண­வர்­களின் ஆளுமை திற­னையும் நம்­பிக்­கை­யையும் சவா­லினை வெற்றிக் கொள்ளும் திற­னையும் வளர்க்கும் பொது­ந­ல­முள்ள நிறு­வ­னங்கள் வடி­வ­மைக்­கப்­ப­ட­வேண்டும். மாண­வர்கள் பாட­சா­லைக்கு வரும் பொழுது பாடசாலை மிக உயர்ந்த பாதுகாப்பு வலயமாக அமைக்கப்படல் வேண்டும். குடும்பத்தில் குறைவிட்ட அன்பை நம்பிக்கையை பாடசாலை மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ  வழங்கும் இடமாக பாடசாலைகள் மாற்றம் பெறவேண்டும். எல்லா மாணவர்களையும் ஒரே சமமாக மதிக்கும் நிலையமாக பாடசாலைகள் வாழ்க்கை பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளல் அதிகரித்துச் செல்வதென்பது சமூகத்தின்,  கல்வியின் வளர்ச்சியையும் பாதிக்கும் அதே வேளை   பண்பாட்டினையும் காவு கொள்ளும் நிகழ்வாகவே சுட்டிக் காட்ட முடியும். இதனால் மூத்தோர், பெற்றோர், ஆசிரியர்கள் பயந்தவர்கள் போல் வாய்மூடி நிற்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.  


‘இழந்து போகின்ற ஒவ்வொரு உயிரும் ஏதாவது ஒருவகையில் நிழல் கொடுக்கக் காத்திருந்த  ஆலமரங்களே’ சிறகு விரித்து சுதந்திர உலகைக் காண ஆசைப்பட்ட அக்கினி குஞ்சுகளே’ உயிரை மாய்த்துக்கொள்ளும் செயற்பாடுகளை  தடுப்போம் தரணியில் உயிர் மதிப்போம்.

- சந்திரலேகா கிங்ஸ்லி