ராஜ­கி­ரிய பகு­தியில் 2016ஆம் ஆண்டு நடந்த சர்ச்­சைக்­கு­ரிய விபத்து ஒன்று தொடர்­பாக, முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­பட்டு, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு, சில நாட்­களில் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.


இவர் கைது செய்­யப்­பட்ட போது,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரைக் கைது செய்­வ­தற்குத் தேவை­யான நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை, நீதி­மன்ற பிடி­யா­ணையும் இருக்­க­வில்லை. கைதுக்­காக முன்­வைக்­கப்­பட்ட கார­ணமும் மிகவும் பல­வீ­ன­மா­னது.


மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்து அது. அந்த விபத்தில் யாரும் உயி­ரி­ழக்­க­வு­மில்லை. சம்­பிக்க ரண­வக்­கவின் வாகனம், நேர­டி­யாக மோதவும் இல்லை.
ஏற்­க­னவே நீதி­மன்­றத்தில் அப­ராதம் செலுத்­தப்­பட்டு முடிக்­கப்­பட்ட வழக்கு, ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு ஒரு மாதத்­துக்­குள்­ளா­கவே, கிண்­டி­யெ­டுக்­கப்­பட்­டது.  சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டார்.


முன்­னரே தெரி­வித்­தி­ருந்தால் தலை­ம­றை­வா­கி­யி­ருப்பார் என்று அவ­ரது முன்னாள் சகா உதய கம்­மன்­பில கூறி­யி­ருந்தார். அவ்­வாறு ஓடி ஒளிவ­தற்கு அவர் ஒன்றும் கொலைக் குற்­ற­வா­ளி­யல்ல.
எவ்­வா­றா­யினும், இந்தச் சம்­பவம் புதிய அர­சாங்­கத்­துக்கு கடும் எதிர்ப்­பு­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களைப் பழி­வாங்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­ட­தாக கடு­மை­யான விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன.


அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­களோ இதனை அர­சியல் பழி­வாங்கல் அல்ல என்றும், பொலிஸ் மற்றும் நீதித்­துறை என்­பன சுதந்­தி­ர­மா­கவே செயற்­ப­டு­கின்­றன என்றும் கூறு­கின்­றனர்.
அர­சியல் பழி­வாங்கல் நோக்­குடன் செயற்­படும் அர­சாங்கம், அதனை ஒப்­புக்­கொள்ளும் என்று ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது தான்.


சம்­பிக்க ரண­வக்க, ராஜித சேனா­ரத்ன போன்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் ஆரம்­பித்­தி­ருக்­கின்ற அர­சியல் பழி­வாங்கல் நட­வ­டிக்­கை­க­ளுக்கும், கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவைத் தோற்­க­டிக்க முயன்­றமை மட்டும் தான் காரணம் என்று பலரும் நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.


ஆனால், இந்த பகை அல்­லது பழி­யு­ணர்வு அதற்கும் அப்­பாற்­பட்­ட­தா­கவே தெரி­கி­றது.
பிணையில் விடு­விக்­கப்­பட்ட பின்னர், தலதா மாளி­கையில் வழி­பா­டு­களை மேற்­கொண்ட சம்­பிக்க ரண­வக்க, செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது, 2004ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்­கவும், 2005இல் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அவரை நிறுத்­தவும் கார­ண­மாக இருந்­த­தற்­காக நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.


இதன் போது அவர் வெளி­யிட்ட தக­வல்கள் முக்­கி­ய­மா­னவை.
2004ஆம் ஆண்டு  பாரா­ளு­மன்றத் தேர்­தலில், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்றி பெற்­றதை அடுத்து, பிர­தமர் பத­விக்கு லக் ஷ்மன் கதிர்­கா­மரை நிய­மிக்கத் திட்­ட­மிட்­டி­ருந்தார் அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க.


அதற்கு ஜாதிக ஹெல உறு­மய எதிர்ப்பு வெளி­யிட்­டது. ஜாதிக ஹெல உறு­மய  தனித்துப் போட்­டி­யிட்டு, 9  பௌத்த பிக்குகள் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர். ஹெல உறு­ம­யவின் ஆத­ர­வின்றி ஆட்­சி­ய­மைக்க முடி­யாது என்ற நிலை இருந்­தது.


அதனை வைத்து, பௌத்தர் அல்­லாத கதிர்­கா­மரை பிர­த­ம­ராக நிய­மிக்கக் கூடாது என்றும், மஹிந்த ராஜபக் ஷவையே பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறு­ம­யவும் மகா­சங்­கமும், ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­விடம் வலி­யு­றுத்­தின.


அப்­போது, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இணைந்து போட்­டி­யிட்ட ஜே.வி.பி 22 ஆச­னங்­க­ளுடன் பல­மான நிலையில் இருந்­தது. அதன் ஆத­ரவும் மஹிந்­த­வுக்கு இருந்­தது. அதன் மூலம் தான் மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.


அது­மாத்­தி­ர­மன்றி, 2005 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக நிறுத்த சந்­தி­ரிகா விரும்­ப­வில்லை. ஜாதிக ஹெல உறு­ம­யவும், ஜே.வி.பியும் அழுத்­தங்­களைக் கொடுத்­ததால் தான், மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரானார்.
அப்­போது மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்த யாருமே இப்­போது அவ­ருடன் இல்லை, அவ­ருடன் இப்­போது இருப்­ப­வர்கள் எல்லாம் பின்னர் வந்து ஒட்டிக் கொண்­ட­வர்கள் தான்.


மஹிந்த ராஜபக் ஷவை பத­வியில் அமர்த்­து­வ­தற்­காக 2004 இலும், 2005இலும்,  போரா­டி­ய­தற்­காக நாட்டு மக்­க­ளிடம், மன்­னிப்புக் கோரு­கிறேன் என்று கூறி­யி­ருக்­கிறார் சம்­பிக்க ரண­வக்க.
சிங்­கள பெளத்தர் அல்­லா­தவர் என்­ப­தற்­காக லக் ஷ்மன் கதிர்­கா­மரை பிர­த­ம­ராக நிய­மிக்­கக்­கூ­டாது என்று கூறி­ய­தற்­காக சம்­பிக்க ரண­வக்க வருந்­த­ வில்லை.


மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்­கி­ய­தற்­காக, ஜனா­தி­ப­தி­யாக்­கி­ய­தற்­கா­கவே, அவர் வருந்­து­கிறார். ஏனென்றால் அதன் விளைவை அவர் இப்­போது அனு­ப­வித்­தி­ருக்­கிறார்.


2004இல் மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ரா­கவோ, 2005இல் அவர் ஜனா­தி­ப­தி­யா­கவோ தெரிவு செய்­யப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால், இலங்­கையின் அர­சியல் சரித்­திரம் வேறு மாதி­ரி­யா­ன­தாக  இருந்­தி­ருக்கும். ராஜபக் ஷவினர் அர­சி­யலில் கோலோச்சும் நிலை வந்­தி­ருக்­காது.


ராஜபக் ஷவி­னரை அர­சி­யலின் உச்­சத்­துக்கு கொண்டு செல்­வ­தற்குக் கார­ண­மாக இருந்­தவர் என்ற போதும், சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்கள் அர­சியல் ரீதி­யாக வேட்­டை­யா­டப்­படும் நிலையே காணப்­ப­டு­கி­றது.


மஹிந்த ராஜபக் ஷவை உய­ரத்­துக்கு கொண்டு செல்­வதில் மாத்­தி­ர­மன்றி அவரை கீழே வீழ்த்­து­வ­தற்கும் முக்­கிய பங்கு வகித்­தவர் சம்­பிக்க ரண­வக்க.


2014இல் ஜனா­தி­பதித் தேர்­தலை அறி­விப்­ப­தற்கு மஹிந்த ராஜபக் ஷ தயா­ராகிக் கொண்­டி­ருந்த போது, தேர்தல் அறி­விப்பு வெளி­யாக மூன்று நாட்­க­ளுக்கு முன்­ன­தாக மஹிந்த அர­சாங்­கத்தில் இருந்து வில­கினார் சம்­பிக்க ரண­வக்க.


அது­போல, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­து­வதில் முக்­கிய பங்­காற்­றி­யவர் ராஜித சேனா­ரத்ன. மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன், மஹிந்த அர­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றிய முதல் நபர் அவர் தான். அவரும், மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குண­வர்த்­த­னவும் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வாக எதி­ர­ணிக்கு சென்­றனர்.


சம்­பிக்க ரண­வக்க பிரிந்து சென்­றது, பௌத்த சிங்­கள வாக்­கு­களை மஹிந்த ராஜபக் ஷவி­ட­மி­ருந்து பிரித்­தது. அது மஹிந்­தவின் தோல்­விக்கு முதல் கார­ணி­யாக அமைந்­தது என்­பதை மறக்க முடி­யாது.
2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­தவின் தோல்­விக்கு பிள்­ளையார் சுழி போட்ட சம்­பிக்க ரண­வக்­கவும், ராஜித சேனா­ரத்­னவும் தான் இப்­போது சட்­டத்தின் கரங்­களால் நசுக்­கப்­ப­டு­கி­றார்கள்.
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு கூட்­டத்தில் உரை­யாற்­றிய அப்­போ­தைய ஜனா­தி­பதி    மஹிந்த ராஜ பக் ஷ, “அர­சாங்­கத்தை விட்டு விலகிச் சென்­ற­வர்­க­ளுக்கு ஒன்றை மட்டும் கூறு­கிறேன். அவர்­களைப் பற்­றிய ஆவணக் கோப்­புகள் என்­னிடம் உள்ளன. ஆனாலும் அவற்றை நான் பயன்­ப­டுத்­த­மாட்டேன்.  நான் அத்­த­கைய மனிதர் அல்ல ” என்று மறை­மு­க­மாக எச்­ச­ரித்­தி­ருந்தார்.


 பதி­லுக்கு சம்­பிக்க ரண­வக்­கவும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பல­முறை எச்­ச­ரிக்­கை­களை விடுத்­தி­ருந்தார். உண்­மை­களை அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும் என மிரட்­டி­யி­ருந்தார்.
“2005 ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­க­ளுடன், செய்து கொண்ட சில இணக்­கப்­பா­டுகள் எதிர்­கா­லத்தில் தோண்­டி­யெ­டுக்­கப்­பட வேண்டும்.


2006 ஆம் ஆண்டு மாவி­லாறு அணைக்­கட்டை விடு­தலைப் புலிகள் மூடிய போது, அதற்­கெ­தி­ராக ஜாதிக ஹெல உறு­மய பிக்­குகள் போராட்டம் நடத்­தினர்.
அப்­போது ஜாதிக ஹெல உறு­ம­யவின் போராட்­டத்தை நிறுத்த மஹிந்த ராஜபக் ஷ அழுத்தம் கொடுத்தார். நாட்டை தான் மட்டும் பாது­காத்­த­தாக அவர் உரிமை கோர முடி­யாது ” என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.


இந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் கூட, அவர் மஹிந்த ராஜ பக் ஷ 5 ஆயிரம் மில்­லியன் ரூபாவை மோசடி செய்து வெளி­நா­டு­களில்  முத­லீடு செய்­தி­ருப்­ப­தாக, குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.
இந்தக் குற்­றச்­சாட்டை மஹிந்த ராஜபக் ஷவினால் மறுக்க முடி­யுமா என்றும் சவால் விடுத்­தி­ருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டிக்க கார­ண­மாக இருந்­த­தற்­கா­கவும் தான் சம்­பிக்க ரண­வக்க இப்­போது பழி­வாங்­கப்­ப­டு­கிறார். இது அவர் செய்த செயல்­களின் விளைவு தான். அதனை அவரே ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.


மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்க, ஜனா­தி­ப­தி­யாக்க முன்­னின்று செயற்­பட்­ட­தற்­காக அவர் மன்­னிப்பு கோரு­கின்ற நிலை இப்­போது உருவாகியிருக்கிறது.


மஹிந்த ராஜபக் ஷ மீது கொண்ட நம்பிக்கையினால் மாத்திரம், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள், அவரை அப்போது ஆதரித்திருக்கவில்லை.


லக் ஷ்மன் கதிர்காமர் என்ற தமிழர் அல்லது பௌத்தர் அல்லாத ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து விடக்கூடாது அதனைத் தடுத்து விட வேண்டும் என்பதற்காகவே அவரை ஆதரித்தார்கள்.
அதன் விளைவாகத் தான் அவர், சிறைக் கதவுகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்க வேண்டியிருந்தது.
2014இல், மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்துவதற்கு சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள். அதனால் தான் மஹிந்த ராஜபக் ஷவினால் இப்போது ஜனாதிபதியாக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.


ராஜபக் ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தாங்கள் வீழ்த்தப்பட்டதற்குக் காரணமானவர்களை அவர்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதை, சம்பிக்க, - ராஜிதவைத் துரத்துவதில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
- கார்வண்ணன்