பல்வேறு மொழிகள் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தனர். 

இதனால், இளைஞர்களின் மனதில் பிரபாகரன் இருக்கிறார். இதனால் அவரது பெயரை கூறியவுடன் கைத்தட்டுகின்றர். கூச்சலிடுகின்றனர். நீதியரசராக இருந்து வடக்கின் முதல்வராக பதவியேற்ற, சி.வி.விக்னேஸ்வரன்கூட இனவாதமாகவே செயற்பட்டு வருகின்றார். 

இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுகிறார்.

ஆனால், இது பிழையானதொரு எடுத்துக்காட்டாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றிணைவதன் ஊடாகவே இந்த பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க முடியும்.

இளைஞர்களுக்கு நல்ல விடயங்களை கூற வேண்டியது எமது கடமையாகும்.  27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது ? 

அத்தனை மொழிகள் உள்ள இந்தியாவில், பெங்காலி மொழியில் தேசிய கீதத்தை பாட முடியுமாக இருந்தால், ஏன் இங்கு மட்டும் ஒரு மொழியில் தேசிய கீதத்தை பாட முடியாது? இது முற்றுமுழுதாக இனவாதத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடாகும் என்றார்.