(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுனாமி பேரழிவு ஏற்பட்டு 15 வருடம் நிறைவடைந்தும் சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றது.

இதுதொடர்பாக ஜனாதிபதி கவனம்செலுத்தி பாதிக்கப்பட்டு வீடற்று இருக்கும் மக்களுக்கு இந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் சவூதி அரசாங்கத்தின் உதவியால் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுனாமி பேரழி ஏற்பட்டு 15வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. ஆனால் சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு சவூதி அரசாங்கம் ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து, அதன் முதல் கட்டமாக 500 வீடுகளும், ஆண்கள், பெண்கள் பாடசாலை யொன்றும் பஸ்தரிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானம் என பூரண வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் முடிவடைந்திருந்தன.

என்றாலும் இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் போது ஏற்பட்ட பிரச்சினையால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின்போது நீதிமன்றம்வரை சென்றிருந்தது.

இறுதியில் நீதிமன்றம் குறித்த வீடுகளை இன விகிதாசார அடிப்படையில் வழங்குமாறும் அதன் பிரகாரம் 70வீதம் முஸ்லிம்களுக்கும் ஏனையவர்களுக்கு 30 வீதமும் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது.

என்றாலும் ஆட்சியில் இருந்த மஹிந்த அரசாங்கமும் ரணில், மைத்திரி அரசாங்கமும் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததன.

இவர்களின் இந்த நடவடிக்கையால் இந்த வீட்டுத்திட்டத்தை நன்கொடையாக வழங்கிய சவூதி அரசாங்கம் மிகவும் கவலையடைந்திருக்கின்றது.

என்ன காரணத்திற்காக இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் இருந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. அன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தவர் தற்போது கொழும்பில் இருக்கின்றார். நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கம் ஏன் இந்த வீடுகளை வழங்காமல் இருக்கின்றுது என்று தனக்கும் தெரியாது என குறிப்பிடுகின்றார்.

எனவே ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ மக்களின் பிரச்சினைகளை கண்டறிய கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்வதுபோல், சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணித்துள்ள வீட்டுத்திட்டத்தையும் பார்வையிடவேண்டும்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு, வீடு இல்லாமல் இருக்கும் மக்கள் இன்றும் அந்த பிரதேசத்தில் கூலி வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். அவர்களை இனங்கண்டு இந்த வீடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.