இலங்கை இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கையில் கடற்கரை கரையோர பிரதேசங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோரப் பிரதேசங்களிலும் முன்னைடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில்,54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிகேடியர் சுபசன வெளிகல தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) காலை 6 மணியளவில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் குறித்த தூய்மையாக்கும் நடவடிக்கைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (29) 220 கிலோ மீற்றர் கடற்கரை பிரதேசம் இவ்வாறு இராணுவத்தினரால் தூய்மைப்படுத்தப்பட்டது.

கடற்கரை பகுதியில் காணப்பட்ட சகல விதமான கழிவுப் பொருட்களும் இதன் போது அகற்றப்பட்டது.

இதன் போது மாவட்டத்தில் உள்ள இராணுவ அதிகாரிகள்,இராணுவ வீரர்களும் கலந்து கொண்டு குறித்த பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.