நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொட‍ைரை தனதாக்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பேர்த்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. 

இந் நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரணடாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது.

இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு நியூஸிலாந்து அணி 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 319 ஓட்டங்களினால் பின் தங்கியது.

இதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்றைய மூன்றாம் நாள் நிறைவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை குவித்திருந்தது.

இந் நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின்போது 137 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.

டேவிட் வோர்னர் 38 ஓட்டங்களுடனும், ஜோ பேர்ன்ஸ் 35 ஓட்டங்களுடனும், லபுசென்கி 19 ஓட்டங்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 7 ஓட்டங்களுடனும் டிராவிஸ் ஹெட் 28 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, மெத்தியூவ் வேட் 30 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். 

இதனால் நியூஸிலாந்து அணிக்கு 487 ஒன்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் நியூஸிலாந்து அணி 71 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் குவித்து 247 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

நியூஸிலாந்து அணி சார்பில் டொம் ப்ளண்டெல் 121 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கோலஷ் 33 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுடனும், டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் நெதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் பேட்டின்சன் 3 விக்கெட்டுக்களையும், லபுசென்கி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 2:0 என்ற கணக்கில் தனதாக்கிக் கொண்டது.