(எம்.எப்.எம்.பஸீர்)

வடக்கு, கிழக்கு மாகாணங்களின்  பொலிஸ் பிரதனிகள் பதவிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதனைவிட மிக முக்கிய விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைப் பிரிவின் தலைமைப் பதவிகளிலும்  மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதியுடன் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் தொடர்பிலான பொலிஸ் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இது வரை வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா  அதிபராக இருந்த ரவி விஜேகுணவர்தனவும் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த மகேஷ் சேனநாயக்கவும் அப்பதவிகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். 

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா  அதிபராக இருந்த ரவி விஜேகுணவர்தன வட மாகாண பொலிஸ் பிரதானி பதவியில் இருந்து மாற்றப்பட்டு வட மேல் மாகாண பொலிஸ் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர், முன்னர் தெற்கு பொலிஸ் பிரதானியாக இருந்த போது, காலி - ரத்கம பகுதியில்  இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டு, பின்னர் வடக்குக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். 

இந் நிலையிலேயே அவர் தற்போது வட மேல் மாகாணத்தின் பொலிஸ் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை வெற்றிடமாகும் வடக்கு பொலிஸ் பிரதானி பதவிக்கு சப்ரகமுவ மற்றும் கேகாலை பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பத்மசிறி முனசிங்க பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட மகேஷ் சேனநாயக்க, அங்கு வாள் வெட்டுக் குழுக்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாரி வந்த நிலையில், அவர்  மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக  மாற்றப்பட்டுள்ளார்.  

அவருக்கு பதிலாக இதுவரை நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த  கே. கட்டுபிடிய, பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாண பொலிஸ் பிரதனிகள் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அண்மையில் கிழக்கு  பொலிஸ் பிரதனியாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க அங்கிருந்து சப்ரகமுவ மாகாண பொலிஸ் பிரதானியாக இடமாற்றப்பட்டுள்ளார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறும் போது கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அட்திபராக இருந்த அவர், தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பிலான சி.ஐ.டி. விசாரணைகளுக்குட்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியாவார். 

இந் நிலையில் அவர் அண்மையில் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டு கிழக்கு பொலிஸ் பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்தார். 

அதனால் வெற்றிடமான கிழக்கு பொலிஸ் பிரதானியாக, தேசிய உளவுத் துறை பிரதானியாக கடமையாற்றியிருந்த, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தககுதல்கள் தொடர்பிலும்  பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும் மிக முக்கிய தகவல்களை வெளிப்படுத்திய அதிகாரியான நிலந்த ஜயவர்தன,   ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தேசிய உளவுத் துறை பிரதானி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

அப்பதவிக்கு  இராணுவ பிரிகேடியர் சலே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நிலந்த ஜயவர்தன பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து வந்தார். 

மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் நலன்புரி பிரிவின் பணிப்பாளராக இருந்த  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன அத்துகோரல பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த  திடீர் இடமாற்றங்களுடன் சேர்த்து  மொத்தமாக 44 பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றங்கள் நிக்ழந்துள்ளன.

குறிப்பாக மிக முக்கிய பல விசாரணைகள்  முன்னெடுக்கப்ப்ட்டு வரும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனனாய்வுத் திணைக்களம் மற்றும் எப்.சி.ஐ.டி. எனப்படும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த கே.டி. பிரியந்த வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார். 

இந் நிலையில் எப்.சி.ஐ.டி. குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக காலி பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும்  நுவன் வெதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனைவிட  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைப் பணிப்பாளராக இருந்த  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த சந்ரசிறி பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டு, பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

அதனால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் புதிய விசாரணைப் பணிப்பாளராக பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.ஜே. பத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்களுக்கு மேலதிகமாக  முன்னாள் பொலிஸ் பேச்சாளரும் சட்டப் பிரிவின் பணிப்பாளருமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவின் கீழ் மேலதிகமாக இருந்த பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பதவிக்கு  குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.ஜே.என். சேனாரத்ன நியமிக்கப்ப்ட்டுள்ளார்.  

அத்துடன் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சர்வதேச பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ. ஏ. ரஞ்சித் ,  அங்ருந்து இடமாற்றப்பட்டு பொலிஸ்  தலைமையகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் குறைகேள் பிரிவின் பனிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனைவிட வைத்தியர் ஷாபி விவகாரத்தில் பேசப்பட்டு, குருணாகலில் இருந்து புத்தளத்துக்கு இடமாற்றப்பட்டிருந்த  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  கித்சிரி ஜயலத் அங்கிருந்து, அனுராதபுரம்  மற்றும் பொலன்னறுவைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

அத்துடன் கிளினொச்சி பிரதிப் பொலிஸ் மா அதிபராக  விஜய ஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றங்களுடன்  வட மத்திய மாகாணத்தின் பொலிஸ் பிரதானியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முனசிங்கவும்,  மத்திய மாகாண பொலிஸ் பிரதானியாக சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பெர்னாண்டோவும்,  தென் மாகாண பொலிஸ் பிரதானியாக  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சில்வாவும் நியமிக்கப்ப்ட்டுள்ளனர்.

 பொலிஸ் மா அதிபரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள பொலிஸ் அறிக்கை பிரகாரம்,  8 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 23 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், இரு பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் உள்ளடங்களாக  5 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள்,  8 பொலிஸ் அத்தியட்சர்களின் பதவிகளில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.