அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 148 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் மெல்போர்னில் ஆரம்பமானது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 467 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி நேற்றைய இரணடாம் நாள் முடிவில் 18 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 44 ஓட்டங்களை பெற்றிருந்தது.

டொம் ப்ளண்டெல் 15 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க டொம் லெதமும், ரோஸ் டெய்லரும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் இன்று ஆரம்பிக்க நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியினரின் பந்து வீச்சுகளுக்கு தாக்குப் பிடிக்காமல் 54.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 148 ஓட்டஙகளை பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.

டொம் லெதம் மாத்திரம் அரை சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்க அணியின் ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுடனும் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் பேட்டின்ஸன் 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இன்றைய மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை குவித்திருந்தது.

டேவிட் வோர்னர் 38 ஓட்டங்களுடனும், ஜோ பேர்ன்ஸ் 35 ஓட்டங்களுடனும், லபுசென்கி 19 ஓட்டங்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, மெத்தியூவ் வேட் 15 ஓட்டங்களுடனும், முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் 12 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 456 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்கத்கது.