மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிராகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (27)  காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த போராட்டம் இடம் பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறுப்பற்ற பிரதேச செயலகங்கள் எதற்கு,சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றதா?,சட்ட விரோதிகளுக்கு உடந்தையாகவுள்ள புவிச்சரிதவியல் திணைக்களம் எதற்கு, வனத்தை வனாந்தரமாக்கும் வனத்திணைக்களம் எதற்கு? மன்னாரில் பாலைவனமாக்க போகின்றீர்களா? மண் மாபியாக்களை வளர்ப்பதா அரசின் நோக்கம்? உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய பாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தோட்ட வெயிலில் மண் அகழ்வில் ஈடுபட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கு கொண்ட அருட்தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் பின் மன்னார் மாவட்டச் செயலகத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் மோகன் ராஜ் உட்பட பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.