கசகஸ்தானில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்திற்குள்ளானதில் பலியனோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய ஆசியாவில் சீனா, ரஷ்யாவை எல்லைகளாக கொண்டு அமைந்துள்ள கசகஸ்தானின் அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகர் நுர்-சுல்தானிற்கு ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் 95 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உட்பட 100 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நிலைதடுமாறியது.

இதையடுத்து அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் மீது பயங்கரமாக மோதியது. இதில் விமானத்தின் பாகங்கள் சிதறி விழுந்தன. இதனால் ஏற்பட்ட தீ காரணமாக கரும்புகை மேலெழுந்தது.

உடனே அவசர உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 15 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் 6 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.