(நா.தனுஜா)

அரசியல்வாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பில் அல்லது மேடையொன்றில் கூறுகின்ற விடயங்களின் உண்மைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதென்றால், இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்.

குறிப்பாக தேர்தல் காலத்தில் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை குறித்துக் பொய்யான கருத்துக்களை வெளியிட்ட உதயகம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மீதும் வழக்குத்தொடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

புதிய அரசாங்கம் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து அவர்களுக்கு எதிராகக் கருத்து வெளியிடுபவர்களை அடக்கும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறது.

அதனாலேயே ராஜித சேனாரத்ன மீது சட்டத்தில் இல்லாததொரு குற்றத்தைச் சுமத்தி அவரைக் கைதுசெய்ய முயற்சிக்கிறது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தவறான தகவல்களை வெளியிட்டார் என்றுகூறி கைது செய்வதற்கான எந்தவொரு வாய்ப்பும் குற்றவியல் சட்டத்தில் இல்லை.

அரசியல்வாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பில் அல்லது மேடையொன்றில் கூறுகின்ற விடயங்களின் உண்மைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதென்றால், இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும்.

வெள்ளை வேன் கலாசாரமொன்று நாட்டில் இருந்தது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அது புதிதாக உருவாக்கப்பட்டதொன்றல்ல. எனவே நாம் வெள்ளை வேன் கடத்தல்களுடன் தொடர்புபட்டிருக்கிறோம் என்று எவரேனும் கூறினால் அதுகுறித்து ஆச்சர்யப்படத் தேவையில்லை. ஆனால் அத்தகையதொரு விடயத்திற்கே ராஜித சேனாரத்னவை கைது செய்ய முயற்சிக்கிறார்கள்.

தகவலொன்றின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் வழக்குத் தொடுப்பதெனின், தேர்தல் காலத்தில் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை குறித்துக் கருத்து வெளியிட்ட உதயகம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மீதும் வழக்குத்தொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.