ஆழிப்பேரலையில் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு நாவலடி நினைவு தூபியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உயிர்களான 957 உயிர்களைக் காவு கொண்ட ஒரு சுனாமி கிராமமாக இந்த நாவலடிக் கிராமம் கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று காலை உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக அதிகளவு உயிரிழப்புகளைக்கொண்ட பிரதேசமான ,நாவலடி பிரதேசத்தில்  சுனாமி 15வது நினைவு தின அனுஷ்டிப்புகள் சிறப்பாக இடம்பெற்றன.

நாவலடியில் உள்ள  சுனாமி நினைவுத்தூபி அருகில் நினைவுகூரும் நிகழ்வு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றுச் சுடரேற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2 ஆயிரத்து 800 பேர் பலியானதுடன் 600க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். நாவலடி டச்பார் புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இக்கிராமத்தில் மாத்திரம் 1800 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.