இன்று காலை சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை இடம்பெறும்.

இச்சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கும்.

அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35-09:38) மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) இடம்பெறும்.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகம், இலங்கையின் தொழில்நுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வைத்திய பீடத்தருகிலுள்ள மைதானத்திலும் கிளிநொச்சியிலுள்ள பொறியில் பீட நிர்வாக கட்டடத்திற்கு முன்பாகவும் இதற்கான ஏற்பாடுகளை யாழ் பல்கலைக்கழகம் செய்துள்ளது.

இவ்வரிய நிகழ்வினை அவதானிப்பதற்காக உள்நாட்டு வெளிநாட்டு கிரகண அவதானிப்பாளர்களும் விஞ்ஞானிகளும் ஆர்வம் கொண்டு யாழப்பாணத்திற்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.

ஏற்கெனவே நூற்றுக்கணக்கானோர் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் நிமித்தம் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உயர்ரக தொலைநோக்கு காட்டிகளுடன் கூடிய முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில் எட்டாம் தரம் முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சூரியகிரகணம் தொடர்பாக நடைபெற்ற தெரிவுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சூரியகிரகணத்தை இம்முகாமிற்கு வருகைதரும் ஆறாயிரத்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதனைப் பாதுகாப்பான முறையில் பார்வையிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெறும் சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் தெரிவிக்கப்படுகிறது

அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

இது கண்களின் விழித்திரையை பாதிக்கும். மேலும் சந்திரன் சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும் என்று பிர்லா கோளரங்கத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்று  காலை 9 மணி முதல் மதியம் 12.29 மணி வரை நிகழ இருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நாம் இதைப் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்களிடையே சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சாப்பிடலாமா, வெளியே வரலாமா, குளிக்க வேண்டுமா, கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவார்களா.அச்சங்களும் கேள்விகளும் உண்டு.

இந்த நிலையில், சூரிய கிரகணம் குறித்த பல்வேறு அறிவியல் பூர்வமான தகவல்களைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம் என்பது வானத்து சந்திரனின் நிழல் விளையாட்டுதான். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் வரும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். சூரியன் சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம். இப்போது டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ளது வளைய சூரிய கிரகணம்.

வளைய சூரியகிரகணம் தமிழகத்தில், உதகை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் ஈரோடு என 9 மாவட்டங்களில், சூரியன் பொன் வளையமாகத் தெரியும். மற்ற மாவட்டங்களில் மற்றும் இந்தியா முழுமைக்கும் சூரியன் பகுதி கிரகணமாகத் தெரியும்.

வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் செகாவத்து என்ற ஊரில் ஆரம்பித்து, உதகையில் நுழைகிறது. சூரிய கிரகணம் டிசம்பர் 26 ஆம் திகதி , காலை 8.07 மணிக்குத் ஆரம்பித்து காலை 11.14 க்கு முடிகிறது. (சுமார் 3 மணி7 நிமிடம்) ஆனால், சூரியன் நெருப்பு வளையமாக தெரியும் நேரம் காலை 9.31க்கு துவங்கி 9.34 வரை சூரியனின் வளையம் நீடிக்கிறது.

2019, டிசம்பர்26 வளைய கிரகணப் பாதையின் அகலம்: 118 கி.மீ, நீளம்: 12,900 கி.மீ, வளைய சூரிய கிரகண பாதை சவூதியில் துவங்கி, வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள காம் வரை பயணிக்கிறது.

சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. அதுபோலவே, சந்திரனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தைப் போன்று சூரியனுக்கு உள்ள தூரம் 400 மடங்கு அதிகம். எனவே, பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன், சூரியன் இரண்டும் ஒரே அளவில் தெரிகிறது. எனவே, சந்திரனின் நிழல் சூரியனை மறைத்து சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது.

சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. அப்போது சில சமயம் அருகிலும், சில சமயம் தொலைவிலும் இருக்கும். முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் அருகில – அதாவது அண்மையில் இருக்கும்போது ஏற்படும். வளைய கிரகணம் என்பது சந்திரன் தூரத்தில் - சேய்மையில் இருக்கும்போது, சந்திரனின் நிழல் சூரியனுக்குள்ளேயே விழும். சூரியனை முழுமையாக மறைக்காது. சூரியன் எட்டிப்பார்த்துக்கொண்டு வெளியே இருக்கும். இதனையே வளைய சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது.

சூரிய கிரகணத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியனைப் பார்ப்பதற்கு சிறப்பான ஒரு சூரிய கண்ணாடி தயாரித்துள்ளனர். அதனைபோட்டுக்கொண்டு சூரியனைப் பார்த்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சூரியனைப் பார்க்கும்போது கண்ணுக்கு எப்போதும் பாதுகாப்பு அவசியம்.