(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாநகரசபை எல்லையில் வாகன தரிப்பிடங்களில் இருந்து பணம் சேகரிப்பதற்கு பொறுப்பாகவிருந்த நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதனால் நகரசபைக்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்த வேண்டிய பணம் 2016 இல் இருந்து இதுவரை செலுத்தப்படாமல் இருக்கின்றது. இதுதொடர்பாக கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர் ஷர்மிலா கோணவல தெரிவித்தார்.

ஏர்பன் சிடிசன் என்ற அமைப்பு நேற்று மாலை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வானங்கள் நிறுத்திவைக்கப்படும் இடங்களில் மோட்டார் வாகன தரிப்பிடத்துக்கான பெயர் பலகை காட்சிப்படுத்தப்படாமல் இருப்பது, 35ஆயிரம் ரூபாவரை தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் இவ்வாறு அறவிடப்படும் கட்டணங்கள் நகரசபைக்கு செலுத்தப்படாமல் இருப்பதுபோன்ற குறைபாடுகள் காரணமாக கொழும்பு வாழ் மக்களும் நாளாந்தம் கொழும்புக்கு வரும் லட்சக்கணக்கான பொது மக்களும் பாரிய சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

கொழும்பு மாநகர எல்லையில் வாகனங்களை தரித்து வைக்கும்போது அந்த வாகன உரிமையாளர்களிடமிருந்து கட்டணம் ஒன்றை அறவிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமைய 1996ஆம் ஆண்டு டினேரா கார்பார்க் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த ஒப்பந்தத்திற்கமைய கொழும்பு நகருக்குள் 160 வாகன தரிப்பு பற்றுச்சீட்டு இயந்திரம் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

என்றாலும் இதுவரை 100 வாகன தரிப்பு பற்றுச்சீட்டு இயந்திரங்களே நிறுவப்பட்டிருக்கின்றன. அவற்றிலும் 20க்கும் அதிகமான இயந்திரங்கள் செயலிழந்துள்ளன.

இவ்வாறான நிலையில் குறித்த நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், நாளாந்தம் 30ஆயிரம் ரூபா அடிப்படையில் தண்டப்பணமாக மாநகரசபைக்கு செலுத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

என்றாலும் குறித்த நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து 30ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளது. இதுதொடர்பாக மாநகரசபை உடனடியாக செயற்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.