முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான்  ஆர்.பி. நெலும்தெனிய இன்று உத்தரவிட்டார். 

சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில்  வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய விவகாரத்தில்  இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் அவரை இவ்வாறு கைது செய்ய நீதிவான்  மேற்படி பிடியாணையை, விசாரணையாளர்களின் கோரிக்கைக்கு அமைய பிறப்பித்தார்.  

வெள்ளை வேன் விவகார ஊடகவியலாளர் சந்திப்பை மையப்படுத்தி குற்றப் புலனயவுத் திணைக்களம் தன்னைக் கைதுசெய்ய முன்னர்,  முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு  கோரி முன்னாள் அமைச்சரும்  ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன ஏற்கனவே முன் பிணை மனு தாக்கல் செய்துள்ள நிலையிலேயே, சட்ட மா அதிபரின் விஷேட ஆலோசனைக்கு அமைய 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்டத்தில் 25 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் நீதிவானிடம் இந்த  பிடியாணை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.