(எம்.மனோசித்ரா)

முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்கவின் கைது விவகாரத்தில் பொலிஸார் பக்க சார்பாக செயற்பட்டிருந்தாலும் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் எம்மால் சுயாதீனப்படுத்தப்பட்ட நீதித்துறையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அஜித் பி பெரேரா தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

இந்த அரசாங்கம் பிணை முறி மோசடிக்காரர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் தண்டனை பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே ஆட்சியை கைபற்றியது. ஆனால் அவற்றுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது சிங்கள பௌத்த தலைவர் ஒருவரையே முதலில் சிறையிலடைத்தது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நீதித்துறை மற்றும் பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றை சுயாதீனப்படுத்தியிருந்தோம். அவ்வாறிருந்த போதிலும் இந்த விடயத்தில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டாலும் நீதித்துறை மீது எமக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகாதவாறு இன்று நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட்டிருக்கிறது. நீதித்துறையானது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல. நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் உரித்துடையதாகும். 

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் விசாரணைகள் இடம்பெற்று முடிந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க சிறையிலடைக்கப்பட்டமை முற்று முழுதான அரசியல் பழிவாங்கலாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.