கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து பெற்ற 3 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்  கொடூர தாய்.

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார், 32 இவருக்கும் கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த திவ்யா,21 என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவரை பிரிந்து திவ்யா செல்வபுரத்தில் உள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். 

கோவையில் உள்ள ஒரு கடையில் திவ்யா வேலைக்கு சென்ற போது, அங்கு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. 

இந்த கள்ளக்காதல் விவகாரம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், திவ்யாவை அழைத்து புத்திமதி கூறினர். 

பிரிந்து வாழும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் ஒரு குழந்தைக்கு தாயான பின்பு இதுபோல் வேறொரு இளைஞருடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று கண்டித்தனர். இதனால் திவ்யா மனவேதனை அடைந்தார். 

கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருப்பதால் கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்து நேற்று மாலை வீட்டில் வைத்து குழந்தை ஹரிவாசாவை திவ்யா பெற்ற குழந்தை என்றும் பாராமல் துணியால் கழுத்தை இறுக்கி கொன்றார். 

பின்னர் குழந்தையை கட்டிலில் தூங்குவது போல் வைத்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து திவ்யாவின் தம்பி வீட்டுக்கு வந்தார். குழந்தை ஹரிவாசாவை எங்கே? என்று கேட்டார். அதற்கு திவ்யா, குழந்தை தூங்குகிறாள் என்று தெரிவித்தார். 

சிறுமி ஹரிவாசா அருகே அவர் சென்று பார்த்த போது எந்த அசைவும் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குழந்தையை தூக்கி கொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றனர். 

அங்கு பரிசோதித்த வைத்தியர், குழந்தை இறந்து விட்டது என தெரிவித்தனர். இதுபற்றி கோவை செல்வபுரம் பொலிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுமியின் தாய் திவ்யாவிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். 

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் திவ்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தனது குழந்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகளை கொன்று விட்டேன் என்றும் தெரிவித்தார். 

இதைதொடர்ந்து பொலிஸார் திவ்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற மகளையே தாய் கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.