இந்தோனேசியாவில் உள்ள குகையில் வெள்ள நீரில் சிக்கி மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட  தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் இந்தோனேசியா மேற்கு ஜாவாவில் உள்ள லெலே குகையில் இருந்து ஐந்து பேரை உயிருடன் மீட்டுள்ளார்கள்.

மீட்புக் குழுவினர் தரைமட்டத்திலிருந்து 30 மீட்டர் கீழே உள்ள குகைக்குள் செல்ல ஒரு மணி நேரம் பிடித்தது என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இயற்கை கழகத்தை சேர்ந்த ஒரு பகுதி மாணவர்கள் குகையில் அடிப்படை பயிற்சி பெற அங்கு சென்றனர். மாணவர்கள் குகைக்குள் நுழைந்தபோது வானிலை இயல்பாக இருந்தது, ஆனால் எதிர்பாராத விதமாக பெய்த மழையானது அந்தப் பகுதியைத் தாக்கியது என இயற்கை கழகத்தின் மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், “குகைக்குள் நீர் ஒரு நீர்வீழ்ச்சி போல புகுந்தது. ஆரம்பத்தில், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட ஐந்து மாணவர்கள் மட்டுமே குகைக்குள் இருந்தனர், ” என  தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் நவம்பர் பிற்பகுதியில் மழைக்காலம் தொடங்கியதுடன் மேற்கு ஜாவா உட்பட இந்தோனேசியாவின் பல பிராந்தியங்கள் கடந்த இரண்டு வாரங்களில் சீரற்ற வானிலை மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.