(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு  தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்  முன்னாள் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரிடம் சி.ஐ.டி. விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற உள்ளதாக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகேவுக்கு அறிவித்தார். 

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மேலும் பலரிடமும் இவ்வாறு இந்த விவகாரத்தில் வாக்கு மூலம் பெறவுள்ளதாகவும் அவர்  நீதிவானுக்கு மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்காமை தொடர்பில்  இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு அமைய இந்த வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

 இந்த விடயம் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தன. 

இதன்போது விளக்கமறியலில் உள்ள கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர்  செய்யப்பட்டனர்.

 இதன்போது விசாரணையாளர்களான சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்ததுடன் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் விடயம் தொடர்பில் மன்றுக்கு தெளிவுபடுத்தினார்.

' இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான வாக்குமூலங்களை பதிவுசெய்ய  முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மற்றும் தற்போதைய சபாநாயகர், பல செயலாளர்களிடம் திகதி கோரப்பட்டுள்ளது. 

இதில் முன்னாள் ஜனாதிபதி வாக்கு மூலம் வழங்க  திகதியை இதுவரை  அறிவிக்கவில்லை. தொடர்ந்து அவர் திகதியொன்றினை  வழங்காது இழுத்தடிப்பாராயின் , அது தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து தேவையான கட்டளைகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம். தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் வடக்கு, கிழக்கை சேர்ந்த மேலும் பலரிடமும் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது.

இந்த விவகாரத்தில் இரு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், அமைச்சரவை செயலாளரின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையிடம்  எதிர்வரும் நத்தார் தினத்துக்கு பிறகு வாக்கு மூலம் பதிவு செய்யப்படும். ' என அறிவித்தார்.

 விடயங்களை ஆராய்ந்த நீதிவான் பிரியந்த லியனகே, சந்தேக நபர்களான பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை எதிர்வரும் 2020 ஜனவரி 6 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க உத்தர்விட்டார்.