(எம்.ஆர்.எம்.வஸீம்)

சர்வதேசத்தின் உதவியுடன் வடக்கு கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கின்றார். இது நாட்டின் ஆட்சிக்கும் மக்கள் ஆணைக்கும் பாரிய சவாலாகும். சர்வதேசம் எமது நாட்டுக்குள் தலையிடுவதற்கே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், வடக்கிலும் கிழக்கிலும் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள தங்களுக்கு உரிமை இருப்பதாக தமிழ் மக்கள் மிகவும் இரகசியமான முறையில் செயற்பட்டு வருகின்றனர். அந்த அதிகாரத்தை பெற்றுக்கொள்ள சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் சிலரும் தெரிவித்திருக்கின்றனர். புதிய அரசாங்கத்துக்கு பாரிய மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இவ்வாறான கூற்றை வெளிப்படுத்துவது மக்கள் ஆணைக்கும் அரச ஆட்சிக்கும் விடுக்கும் பாரிய சவாலாகும்.

அத்துடன் சர்வதேசம் எமது நாட்டு பிரச்சினையில் தலையிடுவதற்கான தேவையான வழியை அமைத்துக்கொடுக்கவே சம்பந்தன் போன்றவர்கள் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வதற்கு காரணமாகும். அதனால் சம்பந்தன் போன்றவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இந்நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் பெரும்பான்மையானவர்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். 

அத்துடன் வடக்கு கிழக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் தலைதூக்காமல் இருக்க, அந்த பிரதேசத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்பது தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கம் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அல்லாத வேறு அரசாங்கம் ஆட்சிக்குவரும் எப்போதும் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை இருந்து வந்திருக்கின்றது.

மேற்கத்திய நாடுகள் எப்போதும் தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கி செயற்படும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருப்பதே விரும்புகின்றது. ஆனால் எமது அரசாங்கம் எப்போதும் தேசத்துக்கு முக்கியத்துவம் வழங்கி, மேற்கத்திய நாடுகளின் தேவைக்கு ஏற்றவகையில் செயற்படாமல், எமது கொள்கையை பாதுகாத்துக்கொண்டே முன்னுக்கு செல்கின்றது. அதுதான் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எமக்குமிடையில் இருக்கும் வித்தியாசம். 

அத்துடன் மேற்கத்திய நாடுகள் எமது பிரச்சினையில் தலையீடு செய்வது, தற்காலத்தில் ஆரம்பித்த விடயமல்ல. 1956இல் பண்டாரநாயக்கவும் இதற்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் நாங்கள் மிகவும் தூரநோக்குடன் சிந்தித்தே எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.