(இராஜதுரை ஹஷான்)

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முறையாக இடம் பெறுகின்றதா என்பது தொடர்பில்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு அவதானித்துள்ளார்.

நிவாரனங்களை  வழங்குவதுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதமாக  முன்னெடுக்குமாறும் இதன் போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக தகவல் மற்றும் தொடர்பாடல், உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது : 

நாட்டில் பல பாகங்களில் கடந்த இரு தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரையில் சுமார் 50 ஆயிரத்திற்கும்  அதிகமான  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணம்  வழங்கப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய ஜனாதிபதி  இன்று பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்hர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இதுவரையில் 170 இலட்சம் நிதி உரிய பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி தேவையாயின் இடைக்கால அறிக்கை ஊடாகவும்,  அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஊடாகவும் பெற்றுக் கொடுக்கப்படும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும்  நடவடிக்கைக முறையாக இடம் பெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். 

இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ள பொது சொத்துக்கள் மற்றும் மக்களின் குடியிருப்புக்களை மீள்புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பிய பின்னர் துரிதமாக முன்னெடுக்கப்படும்.