வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல இஸ்ஸாமிய வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் நேற்றையதினம் (21.12) கைதான குறித்த  வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் நேற்றையதினம் (21.12)  வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் குறித்த வர்த்தக நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பஜார் வீதியில் பதற்ற நிலை காணப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரையும் குறித்த பெண்ணையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றையதினம் (22.12) மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபர் சார்பில் 3 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆயராகி சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். இதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர். 

பின்னர்  வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த நபரை எதிர்வரும் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வவுனியா நகரசபை உறுப்பினர் ஜெபநேசராணி , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ரமணி ஆகியோர் கடும் முயற்சி எடுத்து பல சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி பெண்தரப்பில் ஆஜராகுமாறும் கோரியிருந்த போதிலும் சில சட்டத்தரணிகள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.