மகாவலி கங்கையின் நீர் மட்டம் , இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, தம்பபோவ, அங்கமுவ, கலாவேவ, தெதுறு ஓயா, அம்பன்கொலவேவ, கும்புல்வானவேவ, றம்புக்கன் ஓயா, லுனுகம் ஓயா, உடவளவ போன்ற நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் யாவும் திறந்துவிடப்பட்டுள்ளன. மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள முள்ளாமுனை வீதி கரவெட்டி- மகிழவட்டவான் வீதி போன்ற வீதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பெருக்கினால் தாள் நிலத்திலுள்ள வயல் நிலங்கள் யாவும் நீரில் மூழ்கியுள்ளன.

மாதுறுஒயா ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்குண்ட கிராம மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களை ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதிலும் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

இதேவேளை பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியில் கல்லேல என்ற பிரதேசம் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதேபோன்று பதுளை, பசறை, லுனுகல ஊடாக விவில வீதியும், மீமுரய வீதியும் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. சோமாவதி வீதி புத்தளம் - மன்னார், எ9 வீதியிலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

எல்ல பண்டாரவளை வீதி, பண்டாரவளை பதுளை வீதி, பதுளை மஹியங்கனை வீதி, பதுளை வெலிமடை வீதி, பண்டாரவளை- வெலிமட வீதி ஆகிய வீதிகளில் பயணிக்கும் பொழுது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் செங்கல் ஓயாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததனால் அதனை அண்டியுள்ள வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. நீர் வேகமாக பாய்ந்து ஓடும் வீதிகளிலும், பாலங்களிலும், குளங்களின் கரைகளிலும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று இவற்றின் நீரை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்கள் தொடர்பிலும் கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் நீர்த்தேக்கங்கள் பல பெருக்கெடுத்திருப்பதனால் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் இராணுவத்தினர் பொலிஸார் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் ஒன்றிணைந்து தாழ் நிலங்களில் உள்ள மக்களை வள்ளங்கள் மூலம் இடைத்தங்கல் முகாம்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். பல மாவட்டங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழையுடன் கூடிய காலநிலை தணிந்துள்ள போதிலும் கலாவேவவின் மேல் பிரதேசத்திலும் கலா வேவவிற்கு வரும் நீரின் காரணமாக கலாவேவவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.