(பாகிஸ்தான் கராச்சியிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இரண்டாவதும் தீர்மானமிக்கதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓஷத பெர்னாண்டோ சதம் குவித்து இலங்கையை கௌரவமான நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தபோதிலும் பாகிஸ்தான் இலகுவான வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

பாகிஸ்தானின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களினால் பாகிஸ்தானுக்கான சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்ட இப் போட்டியில் மிகவும் கடினமான மிகவும் கடினமான 476 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் திமுத் கருணாரட்ன (16), குசல் மெண்டிஸ் (0), ஏஞ்சலோ மெத்யூஸ் 19), தினேஷ் சந்திமால் (2), தனஞ்சய டி சில்வா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை 5 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் படுதோல்வியை எதிர்கொண்டது.

ஆனால், ஒரு புறத்தில் விக்கெட்கள் வீழ்ந்த போதிலும் 27 வயதான ஓஷத பெர்னாண்டோ நிதானத்துடனும் பொறுப்புடனும்  துடுப்பெடுத்தாடி 13 பவுண்ட்ரிகளுடன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். தனது நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஓஷத பெர்னாண்டோ கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

தன்னை விட அனுபவசாலியான நிரோஷன் திக்வெல்லவுடன் 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 104 ஓட்டங்களை ஓஷத பகிர்ந்தார். திக்வெல்ல 11 பவுண்ட்றிகளுடன் 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக ரிவேர்ஸ் ஸ்வீப் செய்ய விளைந்து விக்கெட்டை தாரைவார்த்தார். திக்வெல்லவைத் தொடர்ந்து டில்ருவன் பெரேரா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

பாகிஸ்தான் பந்துவீச்சில் நசீம் ஷா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.