(ஆர்.யசி)

கடந்த 2015 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை மீளாய்வு செய்ய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்க முன்னரே மனித உரிமைகள் பேரவையுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரேரணையை மீளப்பெறவே அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் அமைச்சர் கூறினார். 

அடுத்த ஆண்டு மார்ச்சில் ஆரம்பிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் குறித்து ஆராய அரசாங்கம் இப்போதே மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அரசாங்கமாக நாம் இந்த விடயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது. அமைச்சரவையில் ஜனாதிபதி - பிரதமருடன் நாம் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். அரசாங்கமாக நாம் எமது பணிகளை ஆரம்பித்துள்ளோம். 

கடந்த 2015ஆம் ஆண்டில்  நிறைவேற்றப்பட்ட 30/1  தீர்மானம் இலங்கை அரசாங்கதின் இணை அனுசரணையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் முன்னைய அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டாலும் கூட எமது அரசாங்கம் இதனை முழுமையாக நிராகரித்துள்ளது. எம்மால் இந்த விடயத்தில் சர்வதேச தேவைக்கான ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியாது.

பொய்யான குற்றச்சாட்டுக்கள் குறித்து எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாது. ஆகவே 30/1 தீர்மானத்தை மீளப் பெறுவது குறித்து  வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளால் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் அரசாங்கம் இந்த விடயத்தில் உயர்மட்ட நடவடிக்கைகளை கையாளும்.

அதன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னரே மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன்  நாம் இந்த விடயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

பிரேரணையை அரசாங்கம் வாபஸ்பெற உள்ள எமது நிலைப்பாடுகளை தெரிவித்து இதிலிருந்து விடுபட்டுக்கொள்ளவே நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.

எவ்வாறு இருப்பினும் சவால்கள் நிறைந்த ஆண்டாக அடுத்த ஆண்டு எமக்கு அமையும். சர்வதேச நாடுகளின் அரச சார்பற்ற அமைப்புகள் பல இலங்கை விடயத்தில் அரசாங்கத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்ற நிலையில் நாம் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

சர்வதேச அமைப்புகள் விடுதலைப்புலிகளை நியாயப்படுத்தவே இந்த போர்க்குற்றசாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். புலிகளை அளித்தமையையே பொதுமக்களை கொன்றதாக கூறி இராணுவத்தை பழிவாங்கும் விதத்தில் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காது என்றார்.