இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 315 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது.

இந் நிலையில் தொடரை வெற்றி கொள்ளப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்றைய தினம் கட்டாக்கில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை குவித்தது. 

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் இவன் லிவிஸ் 21 ஓட்டத்தையும், ஷெய் ஓப் 42 ஓட்டத்தையும், ரோஸ்டன் சேஸ் 38 ஓட்டத்தையும், சிம்ரன் ஹெட்மேயர் 37 ஓட்டத்தையும், நிக்கோலஸ் பூரன் 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் பொல்லார்ட் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டத்துடனும், ஹோல்டர் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் நவ்தீவ் சைனி 2 விக்கெட்டுக்களையும், மெஹமட் ஷமி, சர்துல் தாகூர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.