(இராஜதுரை ஹஷான்)

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக துறைக்காக பெற்றுக்கொண்ட வணிக கடனை மீள அறவிடுவவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடனை மீள இலகுவான முறையில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.  நுண்கடன் தொடர்பிலான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அதற்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என  அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் வசதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வணிக தேவைக்களுக்காக  300மில்லியன்  ரூபாவிற்கு மேற்படாத  அதிகமான கடனை பெற்றுக் கொண்ட சிறிய  மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தற்போது  கடன்சுமையினால் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

கடனை மீள் செலுத்துவதற்காக  தங்களின் சொத்துக்களை ஏலத்தில் விடவும் தீர்மானித்துள்ளார்கள். அரச மற்றும் தனியார் வங்கிகள் குறித்த கடனை அறவிடுவதை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைய நிதியமைச்சு  சகல வங்கிகளுக்கும் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் குறிப்பிடப்பட்ட வரி மறுசீரமைப்பு ஊடாக  இலங்கை வங்கி மற்றும் அனைத்து வங்கிகளுக்கும் குறிப்பிடத்தக்க  வகையிலான தொகையினை வழங்க முடியும் என  நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.வரி நிவாரணத்தின் முலம் மமிகுதியாகும் நிதியின் ஊடாக நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளை  மேம்படுத்திக் கொள்ள முடியும்.

 வாடிக்கையாளரின் நலன் கருதி மாத்திரம் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. அரச மற்றும் தனியார் வங்கிகளும்  திருப்தியடையும் விதத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தூரநோக்க கொள்கைகளுக்கு அமைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் உட்பட கிராமிய புறங்களில் நுண்கடன்   பல விதத்தில் தற்போது  நடுத்தர மக்களுக்கு   சவாலாக காணப்படுகின்றன. இக்கடன்தொகை 10000 இலட்சத்திற்கும் உட்பட்டதாக காணப்படுகின்றன. தேசிய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து நுண்கடன் திட்டங்களினால்   மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் நுண்கடனை பெற்றுக் கொண்ட பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இன்றும் பலர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு மக்களுக்கு அரசியலுக்கு அப்பாற் சென்று சேவையாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுகின்றன.

நுண்கடன் திட்டங்கள் தொடர்பில்  அரச மற்றும் தனியார்  வங்கியின் பிரதானிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.  கடன்களை எவ்வாறு மீள் செலுத்துவது என்று ஒரு நியமனத்தினை முதலில் மேற்கொள்ள வேண்டும். எவ்வாறு இருப்பினும்   இப்பிரச்சினைக்கும் ஒரு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.