குருணாகல் மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறு   துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

தற்போதைய நிலை தொடர்பில் அமைச்சர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், துரித கதியில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிற்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடும் மழை காரணமாக எஹேட்டுவெள, கல்கமுவ, பொல்பித்திகம, மஹாவ ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இப்பிரதேசத்திலுள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மீ ஓயாவில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளமையினால் மீ ஓயா உள்ளடங்கலாக அங்குள்ள வாவிகள் ஒரே பகுதியில் அமையப்பெற்றுள்ளயைமால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இந்நிலை தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தெதுரு ஓயா நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அதனூடாக ஒரு நிமிடத்திற்கு 27 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இந்நிலை காரணமாக வாரியபொல, ரஸ்நாயக்கபுர, பண்டுவஸ்நுவர மேற்கு, மஹாவ ,நிக்கவெரட்டிய, கொபைகனே மற்றும் இங்கிரிய பிரதேசங்கள் பாரியளவில் வெள்ள அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக குருநாகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அமைச்சர் ஜோன்ஸ்டன்  இப்பிரதேசங்களிலிருந்து மக்களை அகற்றுமாரு குருநாகல் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். அவசர நிலையின் போது செயற்படும் வகையில் பொலிஸ், இராணுவத்தை தயார் நிலையில் வைக்குமாறும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.