சென்னையில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்பட பிரிவில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த செருப்பு’ படம் முதல் பரிசை வென்றுள்ளது.

சென்னையில் 17ஆவது சர்வதேச திரைப்பட விழா 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் தமிழ் பட பிரிவில் விருதுக்காக மெய், ஜீவி, ஹவுஸ்ஓனர், அசுரன், ஒத்தசெருப்பு, கனா, பிழை, சீதக்காதி, தோழர் வெங்கடேசன், பக்ரீத், அடுத்த சாட்டை, சில்லுக்கருப்பட்டி என 12 திரைப்படங்கள் போட்டியிட்டன.

அதில் பார்த்திபன் இயக்கிய தயாரித்து இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக் கருப்பட்டி என்ற படத்திற்கும், விக்ராந்த் நடித்த பக்ரீத் படத்திற்கும் வழங்கப்பட்டது.

நடுவர்கள் தெரிவுசெய்த சிறந்த படமாக தனுஷ் நடித்த அசுரன் தெரிவானது. அமிதாப் பச்சன் ஐகான் விருது ராட்சசன் பட இயக்குநர் ராம்குமாருக்கு அளிக்கப்பட்டது. இவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனிடையே 17ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பலரது பாராட்டுக்களைப் பெற்ற சமுத்திரக்கனி நடித்திருக்கும் ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற திரைப்படம் டிசம்பர் 27 முதல் உலகமெங்கும் வெளியாகிறது என்றும், முதல் பரிசை பெற்ற ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற திரைப்படம் அடுத்த ஆண்டிற்கான ஒஸ்கார் விருதிற்காக தெரிவு செய்யப்படவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.