(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மறுசீரமைப்பொன்று இடம்பெற வேண்டும் என்றே கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கருதுகின்றார்.

எனவே மீள் ஒருங்கிணைப்புக்கான பேச்சுவார்த்தைகளின் ஊடாக தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் பயணிப்பதா அல்லது தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பது போன்ற தீர்மானங்கள் எதிர்காலத்தில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களினால் மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஐக்கிய தேசியக் கட்சியை மீள் ஒருங்கிணைப்பு செய்வதற்கான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பமாகியிருக்கின்றன. கட்சிக்குள் மறுசீரமைப்பொன்று இடம்பெற வேண்டும் என்றே கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கருதுகின்றார்.

அந்தவகையில் பேச்சுவார்த்தைகளின் ஊடாக தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் பயணிப்பதா அல்லது தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதா என்பது போன்ற தீர்மானங்கள் எதிர்காலத்தில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களினால் மேற்கொள்ளப்படும். எனவே இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறோம்.

எமது கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு, முன்நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளத்தக்க விதத்தில் வலுவானதொரு கட்சியாகப் பயணிப்பதற்கு நாம் தயாராகுவோம்.

கட்சியில் ஒவ்வொருவரும் வெளிவேறு அபிப்பிராயங்களையும், நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் கட்சியின் மீள் ஒருங்கிணைப்பிற்கான கலந்துரையாடலின் போது கருத்திற்கொள்ளப்படும். அவற்றின் முடிவில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தீர்மானிக்கப்படும்.