கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை ஊழியரொருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தைக் கையாள்வதில் இலங்கை அரசாங்கமும், நீதித்துறையும் தேசிய சட்டங்களையும் சர்வதேச சட்டத்தையும் உறுதியான முறையில் கடைப்பிடிப்பதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுவிஸ் அரசாங்கத்திற்குக் கூறியிருக்கிறார்.

சுவிஸ் தூதரக ஊழியர் கானியர் பெனிஸ்டர் பிரான்சிஸின் நிலை தொடர்பாக சுவிட்ஸர்லாந்து வெளியுறவு அமைச்சர் இக்னாஸியோ காசிஸ் தினேஷ் குணவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகப் நேற்று வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 120 மற்றும் 190 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்ற நியாயபூர்வ சந்தேகத்தின்பேரில் ஊழியர் இப்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

கடத்தல் விவகாரம் தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்டதாகவும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியைத் தோற்றுவிக்கும் நோக்கில் நடந்துகொண்டதாகவும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தக்கூடிய ஏற்பாடுகளை அந்த இரு பிரிவுகளும் கொண்டிருக்கின்றன.

விசாரணை செயன்முறைகளைத் துரிதப்படுத்துவதற்குச் சாத்தியமான சகல ஒத்துழைப்புக்களும் தரப்பட வேண்டும் என்று இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடிப்படையில் சுவிஸ் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படுபவர் ஒரு இலங்கைப் பிரஜை. அந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தின் முன்னாள் இருக்கிறது என்று சுவிஸ் அமைச்சருக்குக் கூறிய அமைச்சர் குணவர்தன, இலங்கையின் சட்டங்களுக்கு இணங்கச் செய்யக்கூடிய அனைத்தையும் இலங்கை அரசாங்கம் செய்யுமென உறுதியளித்தார். திருமதி பிரான்சிஸுக்கு சாத்தியமான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்கிழமை (டிசம்பர் 17 ஆம் திகதி) சுவிஸ் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்ட குணவர்தன, இலங்கை தேசிய சட்டங்களையும், சர்வதேச நீதி நியமங்களையும் முழுமையாகக் கடைப்பிடித்திருக்கிறது என்றும், இதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு கருத்தும் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.