(நா.தனுஜா)

சஜித் பிரேமதாஸவிற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கட்சித்தலைவர் பதவி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, முன்நோக்கிப் பயணிப்பதொன்றே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவர் பதவி மாத்திரம் போதாது என்றும் கட்சித்தலைவர் பதவியையும் தனக்கே வழங்கப்படவேண்டும் என்றும் கோருகின்றமை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சஜித் பிரேமதாஸவிற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, முன்நோக்கிப் பயணிப்பதொன்றே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஒவ்வொருக்கும் வெளிவேறு நிலைப்பாடுகள் உள்ளன.

ஆனால் தற்போதைய சம்பவங்களை நோக்கும்போது நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமானதும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான முறையில் பயணிப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது மிகவும் சக்திவாய்ந்த பழமையான கட்சியாகும். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக எம்மால் மேலும் வலுவடைய முடியும்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பில் எமது கண்டனத்தை வெளியிட்டமையும் கூட நாம் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக செயற்படுவதன் ஓரங்கமாகும். ஆளுந்தரப்பின் இத்தகைய அநீதியான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மக்களுடன் இணைந்து எதிர்ப்போம்.