அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தானும் தமிழரசுக் கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவே யாழில் சம்பந்தன் சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளார் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை பேரம்பேசலுடன் பெறுவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தபோதும் அவை அனைத்தையும் கோட்டைவிட்டு கடந்த ஆட்சியாளர்களுடன் சரணாகதியடைந்து விட்டு,நான்கு வருடங்கள் நிஷ்டையில் இருந்து விழித்தவர் போன்று தமிழ் மக்களை ஏமாற்றும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழிற்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்களாகிக் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழர்களுக்கு சமஷ்டி கிட்டும் என்று கூறியிருக்கின்றமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் போரின் வலிகளையும்,இழப்புக்களையும் சந்தித்த மக்களின் மீது சர்வதேச சமுகம் அதீத கரிசனை கொண்டிருந்தது. இச்சமயத்தில் தமிழ் மக்களும் தமது பூரண ஆணையை கூட்டமைப்பு வழங்கியிருந்தார்கள்.அச் சமயத்தில் சர்வதேச சமுகத்தினையும், அயல் நாடான இந்தியாவையும் முறையாக பயன்படுத்தி உரிய நகர்வுகளைச் செய்வதற்கு சம்பந்தன் விளைந்திருக்கவில்லை.

அதன் பின்னர் 2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. அச்சமயத்தில் தமிழ் மக்கள் எந்தெந்த விடயங்களை மையப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தார்களோ அவற்றையெல்லாம் தமது சுயலாப அரசியலுக்கு பக்கத்துணையாக இருக்கும் ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்தில் தக்கவைப்பதற்காகவும் நீர்த்துப்போகும் செயற்பாட்டினையே சம்பந்தன் தலைமையிலானவர்கள் முன்னெடுத்தனர்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அரசாங்கம் அமுலாக்கத்திற்கு விளைந்திருக்காத சூழலில் கால அவகாசனத்தினை வழங்கியமை, சர்வதேச விசாரணைக்கான நீதிகோரி ஈழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் மக்கள் வீதிக்கிறங்கியபோது  சர்வதேச விசாரணை நிறைவடைந்து விட்டதாக அறிவித்தமை, புதிய அரசியலமைப்பு உருவாகின்றது என்று கூறியே நான்கு வருடங்களை கடத்தியமை,புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் தமிழ்த் தேசியக் கோட்பாடுகளை உடைத்து ஒற்றை ஆட்சிக்குள்ளான முன்மொழிவை 'பெயர் பலகை' அவசியமில்லை என்று கூறி வார்த்தை வர்ண ஜாலங்களைக் காட்டி காலங்கடத்தியமை என்று அடுக்கிக்கொண்டே செல்ல முடியும்.

ஒவ்வொரு வரவு செலவுத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கும் கூட்டமைப்பின் தயவு தேவைப்பட்டபோதும் அதனை வைத்து, அரசியல் கைதிகள், காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்,இராணுவ முகாம்கள் அகற்றல், வாழ்வாதார திட்டங்கள்,வேலைவாய்ப்பு பெறல் உள்ளிட்ட எந்தவொரு விடயம் குறித்தும் இதயசுத்தியுடன் பேரம்பேசாது தம்மை நியாயப்படுத்துவதற்காக ஜனாதிபதி, பிரதமருடன் சந்தித்து விட்டு இட்டுக்கட்டிய கதைகளை கூறி மக்களை மந்தைகள் என்று நினைத்து ஏமாற்றியே வந்தார்கள். குறைந்தபட்சம் ஒரு பிரதேச செயலகத்தினை பேரம்பேசி தரமுயர்த்துவதற்கே திராணியற்றவர்களாகவும், தனது சொந்த பூமியிலே சிங்கள ஆக்கிரமிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் பேசுகின்றோம், பேசுகின்றோம், நீதிமன்றம் நாடுகின்றோம் என்று கூறி காலம்கடத்தி நெருக்கடிகள் கழுத்துவரை வந்து நெருக்குவதற்கே இடமளித்தார்கள்.

இராஜதந்திர அணுகுமுறை ஊடாக அனைத்தையும் அணுகின்றோம் என்று கூறி வந்திருந்தபோதும், அவை அனைத்துமே எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தக்கவைப்பதற்கான இலக்காகவே இருந்துள்ளது என்பது தான் யதார்த்தமாகும்.

விடுதலைப்போராட்டத்தில் வித்தாகியவர்களை தேர்தல்காலத்தில் பயன்படுத்திவிட்டு பின்னர் அவர்களை பயங்கரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் முழக்கமிட்டுவந்ததோடு,விடுதலைப்புலிகளை அழித்தது ஒருவகையில் நல்லவிடயம் என்று அவர்களின் கட்சியின் 70ஆவது ஆண்டு தினத்தில் கூறியது,சிங்கள மக்களின் ஆதரவைபெற்ற தலைவரை பகைக்கமாட்டோம் என்றும் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பதையெல்லாம் வெறும் வாக்குகளை கொள்ளையடிக்கும் வார்த்தைகளாகவே தேர்தல் விஞ்ஞபனங்களில் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் பெரும்பான்மையிடம் மண்டியிட்டு அனைத்து தந்திரங்களும் கைநழுவி அடுத்தகட்ட இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தற்போது சர்வதேச ஆதரவுடன் சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று மீண்டும் ஒரு புனைகதையொன்றையே சம்பந்தன் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு இணைப்பே நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகின்ற நிலைமையை அறிந்தும் கண்ணயர்ந்திருக்கும் சம்பந்தன் தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையில் இருந்து அரசியல் தீர்வு வரை இவர்களால் ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாத நிலைக்கு தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்.என்று தெரிவித்துள்ளார்.