கிளிநொச்சி, இராமநாதபுரம் வட்டக்கச்சி பொலிஸ் நிலையத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் பதுங்குக்குழிக்கு அருகில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை (31) அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பதுங்குக்குழிக்கு அருகில் சிறிய குழியொன்றினை தோண்டி தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து (01) அப்பகுதிக்கு 571 ஆம் படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவ வீரரொருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

யுத்தம் நிறைவுப்பெற்ற பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிந்த நிலையில் கடந்தவருடம் குறித்த பாதுகாப்பு வேலி அகற்றப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த பதுங்குக்குழி அமைந்திருக்கும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவொன்று 2 மணித்தியால தேடுதல் நடடிக்கையொன்றினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீண்டும் புதன்கிழமை (01) குறித்த பிரதேசத்திற்கு பிரவேசித்த பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸார் குழியினைத் தோண்டிய இரண்டு நபர்களை தேடியுள்ளனர். 

குறித்த செயற்பாடுகளினால் அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.