(எம்.ஆர்.எம்.வஸீம்)

மக்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் பூரண ஆதரவை பெற்றுக்கொடுப்போம். அதற்காக அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டுமென  எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் வரி குறைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு ஐந்நூறு மில்லியன்வரை வருமானம் இழக்கப்பட்டிருக்கின்றது என எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும்வகையில் மினுவங்கொடை பிரதேசத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் பலமுள்ள எதிர்க்கட்சியாக செயற்பட்டு நாட்டினதும் மக்களினதும் நன்மையான விடயங்களுக்கு அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

எதிர்க்கட்சி என்ற காரணத்துக்காக அரசாங்கம் கொண்டுவரும் அனைத்து விடயங்களையும் எதிர்க்கும் குரோத அரசியலை நாங்கள் செய்யப்போவதில்லை.

அதேநேரம் மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பான எந்த தீர்மானங்களை கொண்டுவந்தாலும் அதனை நிராகரிப்பதுடன் அதற்கெதிராக போராடுவோம்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது வேலைத்திட்டத்தைவிட எமது எதிர்த்தரப்பினரின் வேலைத்திட்டத்துக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு கிடைத்தது.

69இலட்சம் மக்கள் அந்த வேலைத்திட்டத்துக்கு ஆதரவளித்திருக்கின்றனர். அதனால் அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் நிவாரணங்களை அரசாங்கம் விரைவாக வழங்கவேண்டும்.

அதற்காக நிதியை ஒதுக்கிக்கொள்ள பாராளுமன்றத்தில் பூரண ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதனால் அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.