(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு செய்யும் நிதியும்,  வழங்கப்படும்   வாக்குறுதிகளும்  வரையறுக்கப்பட்டதாக காணப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உரிய  கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் முறைக்கேடான விதத்தில் நிதி செலவு செய்யப்படும் என ஓமல்பே  சோபித தேரர் தெரிவித்தார்.

எம்பிலிப்பிடி பிரதேசத்தில்  செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட  முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ  தேர்தல் செலவுகளுக்காக பெற்றுக் கொண்ட  27 கோடியினை மீள் செலுத்துவது தொடர்பான நெருக்கடி நிலைமைக்குள் உள்ளார் என நீதியாவல   பாலித தேரர் குறிப்பிட்டுள்ளமை  கவனத்திற்குரியது.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தனது பல்வேறு வழிமுறைகளின் ஊடாக  நிதியினை பெற்று செலவுகளை மேற்கொள்கின்றார்.  கடனாக பெற்றுக் கொள்ளப்பட்ட பணம் ஜனாதிபதியானவுடன் மீள்செலுத்தி விடலாம் என்பது   பெரிய விடயம் அல்ல,  உணர்த்தும் செய்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

துரதிஷ்டவசமாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை.அதனாலே  பெற்றுக் கொண்ட கடனை எவ்வாறு மீள்செலுத்துவது என்ற கவலையில் அவர் உள்ளார். வெற்றியடைந்த தரப்பினரும் தோல்விடைந்தவரை காட்டிலும் அதிகளவான நிதியை செலவிட்டிருக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில்   போட்டியிடுவம் வேட்பாளர்கள் செலவு செய்யும் நிதி,  மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதி  என்பவை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒரு மாற்று வழியினை செயற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின்  தேர்தலில்  போட்டியிடுபவர்கள் முறைக்கேடான விதத்தில் நிதியை செலவு செய்வார்கள் என்றார்.