அமெரிக்காவில் கணவரின் உடலை 10 ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் மறைத்து  வைத்திருந்த பெண்ணின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர்  75 வயதான ஜீன் சவுரோன்-மாதர்ஸ் இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ்  ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார். 

கடந்த மாதம் 22ஆம் திகதி ஜீன் சவுரோன்-மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள், வழக்கமான பொதுநல சோதனையை மேற்கொண்டனர்.

அப்போது ஜீன் மாதர்ஸ் அங்கே உயிரிழந்து காணப்பட்டார். அவரது மரணம் இயற்கையானது  என பொலிஸார் தெரிவித்தனர்.  இதையடுத்து வீட்டை மேலும் சோதனை செய்ததில், ஜீன் மாதர்சின் கணவரான பால் எட்வர்ட்சின் உடல் அங்கிருந்த குளிர்சாதனை பெட்டியிருந்ததை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலுடன் ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.  

அதில் என் மனைவி என்னை கொல்லவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. அது பால் எட்வர்சின் கையெழுத்து எனவும் அந்த கடிதம் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதப்பட்டது என்பதையும் பொலிஸார் உறுதி செய்தனர். 

ஜீன் மாதர்ஸ் அவரது கணவரை கொலை செய்தாரா அல்லது வேறு யார் உதவியுடனும் இதை செய்தாரா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். ஜீன் மாதர்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 1 லட்சத்து 77 ஆயிரம் டொலர்களை அரசு சலுகையாக பெற்றிருக்கலாம்.

மேலும் பால் எட்வர்சின் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னாள் இராணுவ விவகார தொடர்பான காசோலைகளை வாங்கியிருக்கலாம் என உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர். பால் எட்வர்ட்ஸ் உடலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தில் எழுதப்பட்டிருந்த மற்றும் சில தகவல்களை பற்றி பொலிஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.