சிரியாவில் போராளிக் குழுக்களின் கடைசி கோட்டையாக விளங்கும் பகுதியில் அரசப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு மாச்சிலிருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் அரசப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில்  இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள்  உயிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வேறு இடங்களைத் தேடி தஞ்சம் புகுந்தனர்.

சிரியாவின் இத்லிப் பகுதியில் அல் -கொய்தா கிளர்ச்சியாளர்களின் இயக்கத்துடன் தொடர்புடைய போராளி குழுக்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனினும், இந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வருவோம் என சிரிய அரசாங்கம் தொடர்ந்து உறுதி கூறி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப்பகுதியில் கடந்த ஏப்ரலில் நடந்த அரசாங்க ஆதரவு படைகளின் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலை அடுத்து 4இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தங்களது வீடுகளை விட்டு  இடம் பெயர்ந்து சென்றனர்.

அரசு படைகளின் தாக்குதலைத் தவிர்க்கும் வகையில் ரஷ்யா கடந்த ஆகஸ்ட் இறுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசுப் படைகள் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.  30 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்துள்ளது. போராளிக் குழுக்களின் கடைசி கோட்டையாகக் கருதப்படும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.