(எம்.மனோசித்ரா)

கடற்படையினரால் மட்டக்களப்பு கடற்பிரதேசமொன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய கடற்படையினரால் மட்டக்களப்பு கடற் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைவிடப்பட்ட நிலையில் தடை செய்யப்பட்ட 25 மீன் பிடி வலைகள் மீட்க்கப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட மீன் பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக இடம்பெறுகின்ற மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் வளங்கள் பாதிப்புக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளது. இதனால் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.