சத்யராஜ் நடித்த அண்ணா நகர் முதல் தெரு, விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பாலு ஆனந்த் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.

திரையுலகில் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனிடம் உதவியாளராக பணியாற்றியவர் பாலு ஆனந்த். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் ராதிகா இணைந்து நடித்த நானே ராஜா நானே மந்திரி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ரசிகன் ஒரு ரசிகை, அண்ணா நகர் முதல் தெரு, உனக்காகப் பிறந்தேன், சிந்துபாத், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த ஆனந்த தொல்லை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். அத்துடன் நூற்றுகணக்கான திரைப்படங்களிலும், தொலை காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார்.

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்த இயக்குனரும் நடிகருமான பாலு ஆனந்த் (வயது 62). குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு பாலு ஆனந்த் இறந்து விட்டார். இவருக்கு மனைவி உமாமகேஷ்வரி என்ற மனைவியும், ஸ்ரீசரவணன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்    இவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்